உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 14ம் திகதி ஆரம்பமான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடை பெற்று வருகின்றது.
இதில் லீக் சுற்றில் A பிரிவில் இலங்கை, நியூஸிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும், பிப்பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, அயர்லாந்து, சிம்பாபே மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய அணிகளும் பங்கு கொண்டன.
ஒவ்வொரு அணியும் தலா ஆறு போட்டிகளை சந்தித்த லீக் சுற்று இன்றுடன் நிறை வடைந்தது.
இதில் A பிரிவில் பங்கு பற்றிய நாடுகளில் நியூஸிலாந்து அணி எந்த வொரு போட்டியிலும் தோற்காது, ஆறிலும் வெற்றி வாகை சூடி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதனையடுத்து அவுஸ்திரேலியா 2ம் இடத்தையும் (9 புள்ளிகள்), இலங்கை (8 புள்ளிகள்), பங்களாதேஷ் (7 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே மூன்றாம் நான்காம் இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
B பிரிவில் கலந்து கொண்ட அணிகளில் ஆறு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தையும், தென்னாபிரிக்கா (8 புள்ளிகள்), பாகிஸ்தான் (8 புள்ளிகள்), மேற்கிந்திய தீவுகள் (6 புள்ளிகள்) ஆகிய அணிகள் 2ம், 3ம், 4ம் இடங்களையும் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளன.
தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 8 புள்ளிகள் பெற்றிருந்தன. இதனால் ரன்ரேட் அடிப்படையில் தென்னாபிரிக்கா 2வது இடத்தையும் பாகிஸ்தான் 3வது இடத்தையும் பிடித்தன.
இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் அயர்லாந்து அணிகள் தலா 6 புள்ளிகளைப் பெற்றன. ரன்ரேட் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதன் படி B பிரிவில் விளையாடிய அயர்லாந்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சிம்பாபே ஆகிய அணிகளும் A பிரிவில் விளையாடிய ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் வௌியேற்றப்பட்டுள்ளன.
எதிர் வரும் 18ம் திகதி காலிறுதிப் போட்டிகளின் முதல் போட்டியாக தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
19ம் திகதி பங்களாதேஷ் அணியை நடப்புச் சம்பியன் இந்தியா சந்திக்கவுள்ளது.
20ம் திகதி அவுஸ்திரேலியாவை பாகிஸ்தான் அணியும் 21ம் திகதி நியூஸிலாந்து அணியை மேற்கிந்திய தீவுகள் அணியும் எதிர் கொள்ளவுள்ளன.
இவற்றில் வெற்றி பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு செல்வதோடு, அதில் வெற்றி பெரும் இரு அணிகளும் மார்ச் மாதம் 29ம் திகதி இடம் பெறவுள்ள இறுதிப் போட்டியில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
