முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று மிஹிந்தலை விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இன்று முற்பகல் மிஹிந்தலை விகாரைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விகாரையின் விகாராதிபதியிடம் ஆசி பெற்றுக் கொண்டார்.
அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் நிறுத்தபட்டமைக்கான காரணம் தனக்கு தெரியாது எனவும், இவை நிறுத்தப்பட்டமையினால் அதில் பணியாற்றிய ஊழியர்கள், பொறியிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தொழிலை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி அந்தத் திட்டங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு கிடைத்த வருமானம் இல்லாமல் போயுள்ளது. எனவே இதனைவிட அரசாங்கம் செயற்திறனாக செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதன் போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்திருந்தார்.
கேள்வி
போட் சிட்டியின் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில்
அது நிறுத்தப்படும் என நான் நினைக்கவில்லை. அதுவொரு அநியாயம் என ஏன் கூறுகின்றார்கள் என்பது எனக்குத் தெரியாது. துறைமுக நகர் போன்ற ஒன்றை இன்னும் 100 அல்லது 200 வருடங்களிலும் அமைத்துக் கொள்ள முடியாது. எனவே அதனை நிறுத்துவதனால் அபிவிருத்தி பணிகள் 200 வருடங்களுக்கு பின் தள்ளப்படுகிறது. அரசாங்கம் மாற்றமடைய முடியும். நிர்வாகிகள் சிறப்பாக செயற்பாடாவிடின் நிர்வாகிகளை நீக்க வேண்டும். அது மக்கள் எடுக்கும் தீர்மானம். எனினும் அடுத்த நிர்வாகி அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் நிறுத்துவதாக இருந்தால் அதன் மூலம் ஏற்படும் பிரதிபலன்களை புரிந்து கொள்ள வேண்டும். எனவே இதுகுறித்து கலந்துரையாடி சிறந்த தீர்மானமொன்றுக்கு செல்வார்கள் என நான் நினைக்கின்றேன்.
கேள்வி
நுகேகொட மற்றும் கண்டி யில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. எனினும் அதில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை.
பதில்
கண்டி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு கிடைத்தது. எனினும் வேலைப்பளு காரணமாக அதில் கலந்து கொள்ள முடியவில்லை.
கேள்வி
இரத்தனபுரியில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டதில் கலந்து கொள்வீர்களா?
பதில்
அன்றைய நாளில் உள்ள வேலைகளை வைத்தே சிந்திக்க வேண்டும்.
