சீகிரியா சுவரில் பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு – சித்தாண்டி முருகன் கோயில் முன்றலில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு – சித்தாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற 27 வயதான யுவதி சீகிரியா சுவரில் பெயரை எழுதிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் இந்த மாதம் இரண்டாம் திகதி தம்புள்ளை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதுடன், இதன்போது இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குறித்த யுவதிக்கு ஜனாதிபதி தலையீடு செய்து பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், சித்தாண்டியில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது கோரிக்கை மகஜர் ஒன்றும் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
