Monday, March 2, 2015

மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற கிராமங்களுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்

மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு, சன்னார், பெரியமடு.காயாநகர், மினுக்கன், சௌர்னபுரி, பள்ளிவாசல்பிட்டி பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைப்பாடுகள் குறித்து கண்டறியும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த  சனிக்கிழமை (2015-02-28) அப்பகுதிகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்து மீண்டும் இக்கிராமங்களுக்கு மக்கள் மீள்குடியேற வந்துள்ள நிலையில் அவர்கள் பல்வேறு குறைபாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.  இம்மக்களது முக்கிய தேவைகள் என்னவென்பதை ஆராயும் வகையில் அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதேச மக்கள் பிரதி நிதிகள், அரச அதிகாரிகளும் அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இணைந்து கொண்டனர்.

இப்பகுதிகளில் வாழும் மக்கள் தற்போது தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இதன் பின்னர் இவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அறிவறுத்திய அமைச்சர் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் உரிய அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் இங்கு தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது பெரியமடு கிராமத்து மக்கள் தங்களுக்கு  இந்திய அரசால் வழங்கப்படவிருந்த வீடுகள் திடீரென நிறுத்தப்பட்டது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த அமைச்சர் மக்களை பொறுமை காக்குமாறும் இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.

இந்த விஜயத்தின் போது மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர்,உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




Disqus Comments