ஜெர்மனியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் (முகம் தெரியும்படியாக அணியும் முக்காடு) அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் அதியுயர்ந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2003இல் கொண்டுவரப்பட்ட முந்தைய தடையுத்தரவானது மதச் சுதந்திரத்துக்கான உரிமையை மீறியுள்ளதாக ஜெர்மனியின் அரசியலைமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் தொழில் விண்ணப்பம் தோல்வியடைந்திருந்த நிலையிலேயே, அவரால் இந்த வழக்கு போட்டப்பட்டிருந்தது.
குழப்பம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியான நிலைமை இருந்தால் மட்டுமே மத அடையாளங்கள் தடைசெய்யப்பட முடியும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜெர்மனியில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதை தடைசெய்துள்ள எல்லா மாநிலங்களுக்கும் இந்தப் புதிய தீர்ப்பு பொருந்தும் என்று நம்பப்படுகின்றது.
பன்முகத் தன்மையை எதிர்ப்பவர்களை விட, முக்காடு அணிவது ஜெர்மனிய சமூகத்துக்கு பெரிய பாதிப்பாக அமையாது என்று அந்நாட்டின் பசுமைக் கட்சி கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு மத சுதந்திரத்துக்கான நன்னாள் என்று அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
