Monday, March 2, 2015

மஹிந்த ஆடை அணிந்து கொண்டா தேர்தலில் போட்டியிட போகிறார்? - ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி பிரதமராகும் எண்ணத்தில் ஆடை அணிந்து கொண்டா தேர்தலில் போட்டியிடப் போகிறார் எனக் கேட்கத் தோன்றுகிறதாகத் தெரிவித்துள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, வரும் தேர்தலில் தன்னோடு முன்னாள் ஜனாதிபதியையும் ஒரே மேடையில் கொண்டு வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்த சிலர் முயற்சிப்பதாகவும், ஆனால் அவர்களுக்கு மைத்திரிபால யார் என்ற விடயம் தெரியாமல் அவர்கள் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புத்தி ஜீவிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால இவ்வாறு தெரிவித்தார்.  இங்கு அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்,

தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி மெதமுலனுக்கு ஹெலிகொப்டரில் சென்றுள்ளார். அன்று நான் தோற்றிருந்தால் என்னை விலங்கிட்டு சிறைக்குள் தள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. அதற்கான தஸ்தாவேஜூகள் கூட தயாரிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்துள்ளதை இரகசியப் பொலிசார் ஊடாக எனக்கு அறியக் கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி மெதமுலானைக்குச் சென்றதன் பின்னர்தான் எனக்குத் தகவல் கிடைத்தது அவர் ஹெலியில்தான் சென்றுள்ளார் என்று. அதற்கு நான் அனுமதி வழங்கினேனாம். அவ்வாறு நான் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. அவர் ஹெலியில் செல்வது எனக்குத் தெரிந்திருந்தால் அவரை ஹெலியில் செல்ல அனுமதித்திருக்க மாட்டேன்.

எனது வெற்றியில் ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகள் பங்கெடுத்தன. மக்கள் என்னைத் தெரிவு செய்தார்கள். குறிப்பாக இளைஞர்கள் தமது வீடுகளில் இருந்து கொண்டு பேஸ் புக், டுவீட்டர் உட்பட சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய முயற்சிகளைச் செய்து எனது வெற்றிக்கு மிகப் பெரும் பங்களிப்பைச் செய்தார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான ஒரு தேர்தலே கடந்த ஜனாதிபதித் தேர்தலாகும். தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டன. பெனர், போஸ்டர் ஒட்டி, சண்டித்தனத்தைப் பிரயோகித்து, அரச பலம், அரச ஊடகம், அரச வாகனங்கள், அரச வளங்கள் என பாரிய பொது வசதிகளைக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் நான் அவை எதுவும் இன்றியே தேர்தலில் போட்டியிட்டேன். அவர்கள் தேர்தல் காலத்தில் பாவித்த ஜனாதிபதி செயலகத்திற்குரிய வாகனங்கள் தொடர்பில் இன்றும் தகவல்கள்  இல்லை. ஜனாதிபதிச் செயலகத்திற்குப் புதிதாக கொண்டு வரப்பட்ட அனேக வாகனங்கள் இன்று வரை பதிவு செய்யப்படவில்லை. எமக்குக் கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் சுமார் 39 வாகனங்களைக் காணவில்லை. அவற்றுள் குண்டு துலைக்காத 3 அதி சொகுசு வாகனங்களும் அடங்கும். வாகத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் உரிய தகவல்கள் தெரியவில்லை. இன்று கீழ்மட்ட அதிகாரிகளுக்கு இவற்றுக்கு பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் தாமதங்கள் நிகழுவதாக கூறுகின்றனர். கள்வர்களுக்குத் தண்டனை வழங்குவதில் நாட்டில் உள்ள சட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டியுள்ளது. தனக்கு எதிரானவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி தண்டனை வழங்கியதைப் போல சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் தேவைக்காக மட்டும் செயற்பட எம்மால் முடியாது.  அதுதான் நல்லாட்சி. தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க சில காலம் எடுக்கலாம். எனினும் நிச்சயமாகத் தண்டனை வழங்கப்படும். சற்று பொறுத்திருங்கள்.

முன்னாள் ஜனாதிபதி பிரதமராகும் எண்ணத்தில் தேர்தலில் போட்டியிட ஆடை அணிந்து கொண்டா வரப் போகிறார் எனக் கேட்கத் தோன்றுகின்றது. அவரையும் என்னையும் ஒரே மேடையில் மக்கள் முன் பிரசாரத்தில் ஈடுபடுத்த தரகர் பணி செய்யும் சிலர் தற்போது செயற்படுகின்றார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த மைத்திரிபால யார் என்று நன்றாக அறிந்து கொள்ளாமல் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

உங்களுக்குள்ள பிரச்சினைகளை எனக்குத் தெரிவியுங்கள். எனக்கு எழுதி அனுப்புங்கள். இல்லையெனில் எனது இல்லத்தின் தொலைபேசி இலக்கத்திற்குப் பேசி நேரம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு என்னைச் சந்தியுங்கள். உங்களின் நண்பராக எனது சக்திக்கு உட்பட்டு உங்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

(நன்றி - திவயின)
Disqus Comments