கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது தோல்விக்கு இந்தியாவின் 'றோ' அமைப்பு மட்டுமல்ல மேற்கத்தேய அமைப்புகளும் சேர்ந்து வேலை செய்தன என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த செவ்வியின் சில பகுதிகள்
கேள்வி: காலத்துக்கு முந்தி, மிகுந்த சுய நம்பிக்கையுடன் நடத்திய தேர்தலில் உங்கள் தோல்விக்கு காரணம் என்ன?
பதில்: வடக்கு மற்றும் கிழக்கு வாக்களிப்பை நான் தவறாக கணித்துவிட்டேன். மாகாண சபைத் தேர்தலில் கூட 55 சதவீத வாக்களிப்பே இடம்பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் அது 80 சதவீதத்தையும் தாண்டிவிட்டது. இது ஏனென்று எனக்குத் தெரியாது.
கேள்வி: ஆனால், நீங்கள் கிராமிய, ஏழை மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளையும் இழந்துள்ளீர்கள். ?
பதில்: இது சரியல்ல. தென், ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வென்றுள்ளேன். ஆனால், பெரும்பான்மை குறைந்துவிட்டது.
கேள்வி: இந்த தேர்தல் ஒரு காட்டிக்கொடுப்பு அல்லது துரோகமிழைப்பு என நீங்கள் கூறியுள்ளீர்கள். ஏன் அப்படி கூறினீர்கள், யார் துரோகமிழைத்தனர்?
பதில்: எனது ஆட்களேதான். முதல் நாள் இரவு என்னோடு அப்பம் சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் காலை என்னைவிட்டு விலகினர்.
கேள்வி: ஆனால், உங்கள் தோல்விக்கு 'றோ' வே காரணமென்று பாகிஸ்தான் மற்றும் சீனப் பத்திரிகைகளுக்கு கூறியுள்ளீர்கள். அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: 'றோ' மட்டுமல்ல மேற்கத்தேய அமைப்புகளும் சேர்ந்து வேலை செய்தனர்.
கேள்வி: இது 'சதி' என நீங்கள் கூறுவது போலுள்ளது. இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா?
பதில்: அது மிகவும் தெளிவாகவே இருந்தது. நீங்கள் கேட்டாலே அவர்கள் கூறுவர்கள். அவர்கள் இதை மறுக்கவில்லையே.
கேள்வி: இந்திய அரசாங்கம் மறுத்துள்ளதே?
பதில்: உத்தியோகபூர்வமாக மறுத்தது. ஆனால், அதன் ஏஜன்ஸிகள் இப்பிராந்தியத்தில் மும்முரமாக செயற்பட்டுள்ளன.
கேள்வி: தேர்தல் மோசடி நடந்தது என கூறுகின்றீர்களா?
பதில்: இல்லை. என்னை பொறுத்தவரை இது சுதந்திரமான தேர்தல்.
கேள்வி: அப்படியானால் உங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணிதிரட்டுவதற்கு றோவும் மேற்குல ஏஜென்ஸிகளும் உதவியது என கூறுகின்றீர்களா?
பதில்: ஆம்.
கேள்வி: 'றோ'வின் அரசியல் வழிகாட்டலில்தான் செயற்படுகின்றது. அப்படியாயின் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது நீங்கள் குற்றம் காண்கிறீர்களா?
பதில்: இல்லை. அவர் அண்மையில்தான் பிரதமர் ஆனார். இது ஒரு நீண்டகால திட்டமாக இருந்தது. சீனாவையிட்டு என்னை அவர் தவறாக புரிந்திருந்தார்.
கேள்வி: இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் மோடியை நீங்கள் சந்திப்பீர்களா?
பதில்: ஆம். அவர், எனது நாட்டுக்கு வரும்போது நான் அவரை சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
கேள்வி: சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு இரு தடவை தங்கிச் சென்ற போது பிரச்சினை ஏற்பட்டது. அது விளக்க குறைவால் ஏற்பட்டதல்லவா?
பதில்: சீன கப்பல்கள் இங்கு வரும்போது அது சீனாவால் இந்திய தூதுவராலயத்துக்கு தெரிவிக்கப்படும். அது இந்த தடவையும் நடந்திருக்க வேண்டும். அது யாவருக்கும் தெரியும்.
கேள்வி: அப்படியானால் இந்த மனத்தாங்கலை தெளிவுபடுத்துவது ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது?
பதில்: அவர்கள் ஏதாவது பிரச்சினையை தோற்றுவிக்க வேண்டுமென நினைக்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன்.
கேள்வி: தமிழர் விடயத்தில் நீங்கள் வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை எனவும் சீனாவின் கேந்திர செல்வாக்கை இந்த பிராந்தியத்தில் நீங்கள் அதிகரிக்க விட்டதாகவும் இந்தியா கூறுகின்றது. 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய உறவுகள் சீர் கெட்டது எவ்வாறு?
பதில்: 2012இல் மனித உரிமைகள் பேரவையில் எனக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இது சீனா தொடர்பிலான பிழையான விளக்கத்தால் ஏற்பட்டதென நான் நினைத்தேன்.
கேள்வி: புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தியுள்ளது. இதையிட்டு நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: அது நல்லது. எனது அரசாங்கம் இந்தியாவை சீண்டவில்லை. எதையும் இந்தியாவிடம் கேட்டுவிட்டே வேறு நாடுகளிடம் கொடுத்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம், கொழும்பு துறைமுகம் எல்லாமே அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் கேள்விப் பத்திரம் சமர்ப்பிக்கவில்லை.
கேள்வி: புதிய ஆட்சிக்கு பின்னர் சீனாவுடனான உறவு பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் நிறுத்தப்பட்டதையிட்டு என்ன கருதுகின்றீர்கள்?
பதில்: அவர்கள், அப்படி செய்திருக்கக் கூடாது. நூறு வருடங்கள் போனாலும் இப்படியான துறைமுக உடன்பாடு எமக்கு கிடைக்காது.
கேள்வி: நீங்கள் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஏற்புடைமை அறிக்கையை பெறவில்லை. சீன கம்பனிக்கு இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுத்தீர்கள் என புதிய அரசாங்கம் கூறுகின்றது. இதை விட உங்கள் ஆட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
பதில்: அவர்கள், அவற்றை நிரூபிக்க வேண்டும். சீன பிரதமர் வந்துதான் துறைமுக நகர் திட்டத்தை தொடக்கி வைத்தார். சீனாவோ, இந்தியாவோ, அமெரிக்காவோ தொடங்கிய திட்டங்களை அடுத்து வரும் அரசாங்கம் நிறுத்த முடியாது. இது சீன சார்பான செயற்பாடு அல்ல.
கேள்வி: உங்கள் குடும்பத்தாருக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. உங்கள் தம்பியின் கடவுச்சீட்டு பறிக்கப்பட்டுள்ளது. உங்கள் மகன் விசாரிக்கப்பட்டார். நீங்கள் இவற்றையிட்டு கவலைப்படவில்லையா?
பதில்: இது துன்புறுத்தல் மட்டுமேயாகும். எனது மகனுக்கு எதிரான வழக்கை அவர்கள் வாபஸ் பெற வேண்டியுள்ளது. எனது தம்பியான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சட்டப்படியே சகலதையும் செய்துள்ளார்.
கேள்வி: இந்த குற்றச்சாட்டுக்களை நீங்கள் நிராகரிக்கலாம். ஆனால் மிகவும் கடுமையான யுத்த குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு உள்ளவே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த குற்ற விசாரணையை தொடக்கவுள்ளதாக பிரித்தானியாவில் வைத்து கூறியுள்ளாரே.
பதில்: அவர், செய்யட்டும். யார் சொன்னார்கள் செய்ய வேண்டாமென்று. ஒரு சாதாரண பொதுமகன் கூட கொல்லப்படக் கூடாது என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு நான் அறிவுறுத்தியிருந்தேன்.
கேள்வி: நீங்கள் இன்னொரு போட்டிக்கு தயாராகவுள்ளீர்களா? மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா?
பதில்: பல தலைவர்கள் தோற்றுப் போனதை நான் பார்த்துள்ளேன். ஆனால், தோற்ற பின்னரும் என்னைக் காணவும் மீண்டும் அரசியல்வாதியாக வரும்படி அழைக்கவும் பெரும்பாலானோர் வருவதையிட்டு நான் ஆச்சரியப்படுகின்றேன். நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.
கேள்வி: உங்கள் தீர்மானம் எதில் தங்கியுள்ளது?
பதில்: நான், கட்சியை ஜனாதிபதி சிறிசேனவிடம் கொடுத்தேன். எனது கட்சிக்காரர்களை அவர்கள் துன்புறுத்துகின்றனர். நான் வேலை கொடுத்தவர்களை வேலையிலிருந்து நிறுத்துகின்றனர். இப்படி நடக்காதிருந்தால் நான் இந்த அரசாங்கத்தை ஆதரித்துக்கொண்டிருப்பேன். அவர்கள் எம்மை விசாரிக்கவும் மறியலில் போடவும் கடவுச்சீட்டுக்களை பறிக்கவும் செய்துள்ளனர். அவர்களிடம் ஆதாரம் இல்லை. இந்த நிலையில் நான் எப்படி இளைப்பாற முடியும் ஓய்வு பெற்றுவிட்டதாக நான் ஒரு போதும் கூறவில்லை. இப்போது நான் ஓய்வுவெடுத்துக்கொண்டுள்ளேன்.
