கணினித் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் வேறு பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வரும் காலமிது. அந்த வகையில் கூகுள் ஓட்டுநரின் தேவை இல்லாத தானியங்கி கார்களை தயாரித்து வருகிறது. செல்போன் மற்றும் கணினி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள், எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடக்கும் உலக செல்போன்
மாநாட்டில் கேள்வி நேரத்தின் போது பேஸ்புக் கார் தயாரிப்பில் ஈடுபடுமா என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க்கிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மார்க், சர்வதேச அளவில் பேஸ்புக்கின் வலையமைப்பை இன்னும் விரிவாக்குவது, இண்டர்நெட். ஓஆர்ஜி-யின் மூலம் வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களைச் சென்றடைவது மற்றும் விர்சுவல்-ரியாலிட்டி தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது போன்றவையே பேஸ்புக்கின் இலக்கு என்றும், தற்போது கார் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.