Monday, March 9, 2015

சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வர விடமாட்டேன்: லண்டனில் ஜனாதிபதி MY3

புதிய தேர்தல் முறை மாற்றத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அவ்வாறான ஒரு சட்ட மூலத்தில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்றைய தினம் லண்டனில் ஜனாதிபதியை சந்தித்த Sonakar.com பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் இர்பான் இக்பால் தேர்தல் முறை தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பாக தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார சபையில் தெளிவாகத் தெரிவித்திருப்பதாகவும் அது மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு நன்கு தெரியும் எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இது தொடர்பில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தன்னோடு கொழும்பில் தனது இல்லத்தில் வைத்தும் இது தொடர்பில் பல தடவைகள் உரையாடியுள்ளதாகவும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்தவொரு விடயத்திற்கும் ஜனாதிபதி இணங்க மாட்டார் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

பிரித்தானிய மகாராணியாரின் அழைப்பை ஏற்று பொதுநலவாய தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள விஜயம் செய்திருக்கும் உயர் மட்ட பிரமுகர்கள் குழுவில் அடங்கும் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி இது பற்றி மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டின் நிர்வாக முறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு திட்டங்கள் ஜனாதிபதியிடம் இருக்கிறது. எனினும் எந்தவொரு கட்டத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அவர் திடமாக இருக்கிறார் என தெரிவித்தார்.

எனினும், ஜனாதிபதி நிலை மாற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என வினவப்பட்ட போது, தேர்தலுக்கு முன் இருந்த அதே  மைத்ரிபாலவையே நான் இன்னும் காண்கிறேன். ஒரு சிறு மாற்றமும் இல்லை. அதிகாரமோ பதவியோ அவரை மாற்றவில்லை எனவே இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்திலும் அவர் அவ்வாறே இருப்பார் என்பது எனது நம்பிக்கை என்று திடமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments