அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஅகதுஹூ
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவொருக்கு .....!
இலங்கைப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை மையமாகக்கொண்டு அண்மையில் பல காழ்புணர்வுக் கட்டுரைகள் இணையத்தில் உலா வருகின்றன. அதற்கான பதில் கடிதம்.
அடுத்தவர்களைப் பற்றிய தீய எண்ணங்களும் தோல்விகளும், கோபங்களும், பழிவாங்கல் உணர்வுகளும், காழ்புணர்வுகளுமே அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும், அவதூறுகளையும் பரப்பும் மனோநிலையினை ஏற்படுத்துகின்றது.
ஷைத்தான் மனிதனை பாவத்தின் பால் சிக்கவைக்கும் முக்கிய ஆயுதம் அவதூறும், இட்டுக்கட்டுதலுமாகும். புறம்பேசுவது இறந்த தன் சகோதரனின் தன் மாமிசத்தை சாப்பிடுவது போன்றதாகும்.
பொய்யாக இட்டுக்கட்டி அக்கட்டுரையில் குறிப்பிட்டது போன்ற எவ்வித கலாசார சீர்கேடுகளும் எமது பல்கலைக்கழகத்தில் இடம்பெறவில்லை என்பதனை மிகவும் உறுதியாகவும், பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறான கருத்துக்களை பரப்புபவர்களுக்கு இறைவனும் அவன் தூதரும் விடுத்த எச்சரிக்கைகளுமே போதுமானதாகும். இட்டுக்கட்டியவர்கள், வதந்திகளை பரப்பியவர்கள் நிச்சயம் தான் செய்தவற்றிற்கான கூலியை மறுமையில் பெற்றுக்கொள்வர்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பான எம். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் எக்கனவைக் கண்டாரோ அக்கனவிற்கான முட்டுக்கட்டைகள் வெளிச்சக்திகளின் ஆக்கிரமிப்புக்களிலிருந்து எமது சமூகத்தின் அரும்பெரும் சொத்தொன்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே எமது பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் மாணவர் ரீதியான தலைமமைத்துவங்களை இறைவன் தான் நாடியவர்களுக்கு வழங்கி தீய சக்திககளின் ஆக்கிரமிப்புக்களிலிருந்து எமது பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தினர்.
ஒரு தேசிய பல்கலைக்கழம் என்ற ரீதியில் பல்லின மக்களும் இரண்டறக் கலந்து வாழும் போது புரிந்துணர்வுடன் வாழ்வதே சிறந்தது. இது இவ்வாறிருக்க எமது சமூகமே எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் வங்குரோத்து, நயவஞ்சகத்தனமான செயல்களை செய்வது கேவலமான விடயமாகும்.
பல்கலைக்கழக விடுதிக்குள் முடங்கிக்கிடக்கும் மாணவிகளுக்கு ஒரு பொழுதுபோக்கு கலையம்சம் கட்டாயம் அவசியம் என்பது நிச்சயம். அதுவும் ஆண், பெண் கலப்பற்று பெண்கள் விடுதிக்கு உள்ளேயே தனியாக பெண் மாணவிகளை மாத்திரம் கொண்டு பல்கலைக்கழக பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும், பெண் விடுதிப் பொறுப்பாளர்களினதும் பெண் விரிவுரையாளர்களினதும் மேற்பார்வையின் கீழ் எவ்வித ஒலி, ஒளி பதிவுகளும் செய்யப்படாது மிகவும் பாதுகாப்பான முறையில் இடம்பெற்றதில் எவ்வித ஆட்சேபனையும் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் சமூகத்தில் இடம்பெறும் உலக்கை பிரச்சினைகளை விட்டு விட்டு ஊசிப் பிரச்சினைகளை பார்ப்பதேயாகும்.
தனது சகோதரிகள் என்று பெண் மாணவிகளைப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை. மாறாக உணவகங்கள், பல்லூடாக பொருட் கடைகள், பாதையோரங்களில் நின்று பெண் மாணவிகளை கிண்டலடித்து இடையழகை பார்த்து இரசிக்கும் மூடர் கூட்டத்திற்கு இது ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை விமர்சித்து போலிக்குரல் கொடுக்கும் விஷமிகளிடம் கேட்கின்றேன். ஆண், பெண் கலப்பற்று பெண்கள் உரிய பாதுகாப்புடன் அவர்களின் விடுதிகளுக்குள்ளேயே கலை நிகழ்ச்சிகளை செய்தால் அது தவறா? இது வழக்கமாக சமயம் சார்ந்த, சமயம் சாராத எல்லா கல்வி நிலையங்களிலும் இடம்பெறுவது வழமைதான்.
'எத்தனையோ பெண்களை ஏமாற்றி லீலைகளில் ஈடுபட்டவர்கள் அரங்கேற்றிய கெச்சிமலையில் நடந்தேறிய கொடுமை' என்ற கட்டுரையில் உறுதியாக குறிப்பிடக்கூடிய விடயம் கலை கலாசார பீடம் ஏற்பாடு செய்த சுற்றுலாவில் கெச்சிமலை திட்டமிடப்படாத ஒரு இடமாகும். இறைவன் மீது ஆணையாக அங்கு செல்லவுமில்லை. செல்லாத ஒரு இடத்திற்கு சென்றதாகவும், அங்கு கலாசார அத்துமீறல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானதாகும்.
நடக்காக ஒன்றை நடந்ததாக கூறும் நபர்களுக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை.
'நம்பிக்கை கொண்டோரே ! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காக கவலைப்படுவீர்கள்' (அல்குர்ஆன் 49 : 06)
எவன் என்ன சொன்னாலும் அதனை நம்பி அதனை பரப்ப முற்பட்டால் அவனை விட பொய்யன் யாருமில்லை. ;
மேலும் குறிப்பிட்ட நபர் தனது கட்டுரையில் மாணவ, மாணவிகள் ஒரு சிலரே இதனை செய்தனர் என தனது பழிவாங்கல் மட்டும், மனரீதியாக ஒரு சிலர் மீது கொண்டிருந்த தனிப்பட்ட கோபத்தை வெளிக்காட்டியுள்ளார் என்பதனை காணக்கூடியதாக உள்ளது. மாநபியின் வழித்தோன்றல்கள் நடைபெறாத ஒன்றை நடந்ததாக இட்டுக்கட்டுவதுதான் முறையா? இல்லை தன் சகோதரிகளின் மானத்தை மலிவு விலைக்கு விற்பனை செய்து தனது இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிப்பதுதான் சரியா? இது சமூக, மத அக்கறை கொண்டவர்களின் பண்பா?
நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தீய எண்ணம் அவதூறு புறம் பேசுபவர்கள் மறுமையில் நன்மையை இழக்க வேண்டியதுடன் நன்மை தீர்ந்த பின் பாவங்களை சுமந்து நரகத்தில் தூக்கியெறியப்படும் நிலை ஏற்படும். (முஸ்லிம் 4678)
அவதூறு செல்பவனுக்கு இஸ்லாமியத் தண்டனை 80 கசையடி என்பதனையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
தனிப்பட்ட ஒரு சில மாணவிகளை பழிவாங்க இவ்வாறான தரக்குறைவான கட்டுரைகளை எழுதி வெளியிடுபவர்கள் சிந்திக்க வேண்டும். அநியாயம் செய்தவர் இவ்வுலகிலேயே அநியாயம் செய்யப்படுவர் என்று. தனது உடன்பிறப்பொன்றிற்கு இவ்வாறு நடந்திருந்தால் உமது உள்ளம் எவ்வாறு பாடுபட்டிருக்கும் என்பதனை என்பதனை எழுதிய மடையர்கள் சிந்தித்தாக வேண்டும்.
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதை அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹூரைர ரலி, நூல் முஸ்லிம் : 06)
எனவே இவ்வாறான நம்பகமற்ற செய்திகளை பரப்பும் போது இறைவனையும் நரகத்தையும் அஞ்சிக்கொள்ளுமாறு வேண்டுவதுடன் தனது இணையப் பக்கங்களில் இன்னும் இந்த பாவத்தின் கறை காணப்படின் சமூக நலன் மற்றும் மறுமையில் இறைவனுக்கு பதில் கூற வேண்டுமே என்ற சிந்தனையோடு அவற்றினை நீக்கிவிடுவதோடு உண்மை நிலைமைகளை கண்டறியுமாறும் வேண்டுகின்றோம்.
அவதூறு கூறும் பாவமானது சர்வ சாதாரணமாக பாமர மகன் கூட செய்யலாம் என்பதனால் தான் இறைவன் குறிப்பாக நம்பிக்கை கொண்டவர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கிறான். பொய்யை இட்டுக்கட்டுவது இறையச்சம் இல்லாதவன் நரகத்தை பயந்து வாழாதவன் செயலாகும்.
மேலும் எமது பல்கலைக்கழத்தின் நிர்வாகம், மாணவர் பேரவை, முஸ்லிம் மஜ்லிஸ் என்பன எந்நேரமும் விழிப்பாகவே இருக்கின்றது. மாணவர் நேயம் கொண்டதாகவும் மார்க்க வரையறைகளை மீறாததாகவும் இவை செயற்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு எமது பல்கலைக்கழக மற்றும் கலை கலாசார பீடத்தின் மீது தனிப்பட்ட ஒரு சிலர் கொண்ட கோபம் மற்றும் பழிவாங்கல்களோ சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அவல நிலைக்கு பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கலாச்சார சீரழிவின் உச்ச கட்டம் ளுநுருளுடு கலாசார சீரழிவு என்ற கட்டுரைகளை எழுத தூண்டியிருக்கின்றது.
அவதூறு புறம் பேசியவர்களை உங்கள் நாவுகளால் அதை பரப்பியதை எண்ணிப்பாருங்கள் ! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். இதனை இலேசானதாகவும் எண்ணிக்கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கின்றது. அல்குர்ஆன் (24 : 15)
ஆகவே அவதூறு பரப்புபவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் மிக கடுமையான பின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் அதே வேளை இவ்வாறான போலிக் கட்டுரைகளை சமூக வலைத்தள பாவனையாளர்கள் பரப்புவதில் சிந்தித்து செயறல்படுமாறும் உண்மை நிலைகளை அறிந்து செயற்படுமாறும், சமூகம் பற்றி சிந்திக்குமாறும், தமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் பாவியாக மாறாமலிருக்குமாகும். இம்மை, மறுமையில் இறைவனின் கோபத்திற்கு உள்ளாகாமலும் நரகத்தை தங்குமிடமாக ஆக்கிக்கொள்ளாமலும் இருக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
ஏ.எச்.எம். றிழ்வான்
பல்கலைக்கழக மாணவர் பேரவை செயலாளர்
கலை, கலாசார பீட தலைவர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
2016.04.24
