Monday, March 21, 2016

தவக்குல் கர்மா னும் மங்கள விளக்கும் ஒளிவும் தெளிவும் - ஓா் சமூகவியல் பார்வை.

சகோதரி தவக்குல் கர்மான் பற்றிய கருத்தாடல்களில் நீ ஏன் மௌனம் காத்தாய் என்று மறுமையில் இறைவன் என்னை ஒரே பிடியாய் பிடிக்காமலிருக்கவும் சில தெளிவுகளை ஒளிவு மறைவுமின்றி முன்வைக்கவுமே இந்தப் பதிவு.
சகோதரி தவக்குல் கர்மான் செய்த மங்கள விளக்கேற்றிய காரியம் சரியா அல்லது தவறா என்று தீர்மானிக்கும் முன்னர் இரண்டு விடயங்களை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
01) சகோதரி தவக்குல் கர்மானுக்கு கீழைத்தேய மக்களின் ஒரு கலாச்சாரமான மங்கள விளக்கேற்றும் விடயம் பற்றிய சரியான தெளிவு இல்லாமலிருந்திருக்கலாம்
02) நோபள் பரிசு பெரும் அளவு தைரியமிக்க, சமூக சித்தாந்தங்களைக் கொண்ட ஒரு இஸ்லாமிய பெண்மணி இதனை அறியாமல் விட்டதேன்?
சகோதரி தவக்குல் கர்மான் இலங்கை வந்ததன் நோக்கம் மாவனல்லையில் அமையப்பெற்றுள்ள ஆயிஷா சித்தீகா பெண்கள் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை சிறப்பிக்கவே தவிர இந்த மங்கள விளங்கேற்றும் காரியங்களை முன்னேடுக்கவல்ல. அவர் ஒரு மத்திய கிழக்கு பெண்மணி. எனவே இலங்கை போன்ற கீழைத்தேய மக்களின் இவ்வாறான மார்க்க விழுமியங்களோடு தொடர்புடைய கலாச்சாரங்கள் அவரைச் சென்றடையாமல் இருந்திருக்கலாம்.
அவரைச் சாடி ஒரு இயக்கத்தை முற்றிலுமாக நாம் குறை கூறுவது சரியென்றாகாது. சகோதரி தவக்குல் கர்மான் தவறு செய்தால் அது அவர் சார்ந்த தனிப்பட்ட குற்றமே தவிர மாறாக அவர் ஜமா அத்தே இஸ்லாமியின் வளர்ப்புப் பிள்ளையல்ல. எனவே இயக்கம் என்பது தனிப்பட்டவர்களது மார்க்க வரம்பு மீறல்கள்களுக்கு பொறுப்பாகாது. குற்றம் என்பது தத்தம் சுய அறிவைப் பொறுத்தே அமையும். சகோதரி தவக்குல் கர்மான் மார்க்கத்தில் விளக்கம் கொடுத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பத்வாதாரியுமல்ல. மாறாக அவரும் எம்மைப் போன்று பரம்பரையாக இஸ்லாத்தை பின்பற்றி வாழும் ஒரு சாதாரண முஸ்லிம். எனவே, மனிதன் தவறு மறதி இரண்டிற்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருப்பவன் என்பது இறைவன் வார்த்தைகள் மூலம் அனைவரும் அறிந்த யதார்த்தம்.
சகோதரி தவக்குல் கர்மான் கீழைத்தேய மக்களின் குறிப்பாக இலங்கை மக்களின் மங்கள விளக்கேற்றும் சம்பிரதாயம் பற்றிய தெளிவான பெற்றுக் கொள்ளாமைக்கு அவருடன் இருந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒரு காரணம். அவருடைய காரியம் மார்க்க வரையறைகள் தாண்டியது என்று அவருக்கு உணர்த்தியிருந்தாலே போதுமானது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
மேலும் சகோதரி தவக்குல் கர்மான் உலகிலே அதி பெறுமதிவாய்ந்த நோபல் பரிசு பெற்ற இளம் வயது இஸ்லாமியப் பெண்மையாவார். இலங்கை போன்ற பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது மார்க்க வரையறைகள் அந்நிய கலாச்சார விடயங்கள் போன்றவற்றில் கண்ணும் கருத்துமாக இருப்பது மிக முக்கியமான விடயமாகும். மங்கள விளக்கேற்றுதான என்று வெறுமனே வார்த்தைகளால் கூறி விட்டு கைகழுவிவிட முடியாது. காரணம் நபிகளாரின் வாழ்க்கையில் அமையப் பெறாத ஒன்றை யார் செய்தாலும் எதற்காகச் செய்தாலும் குற்றம் குற்றமே.
சமூக ஒற்றுமையையும் பல்லின சமூக கட்டமைப்பையும் பாதுகாக்க வேண்டும். கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மார்க்கத்தை நடுத்தெருவில் நிறுத்தி கேளிக்கைக்கு ஆளாக்க முடியாது.
மார்க்கம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஆண்டான் செய்தாலும் அடிமை செய்தாலும் மார்க்க வரையறைகள் மீறப்படும் அனைத்து சந்தர்ப்பங்களும் குற்றம் குற்றமே. உண்மையான ஒரு முஸ்லிம் காற்று அடிக்கும் திசைகளில் அசையும் சேற்றிலே நடப்பட்ட கம்பாக இருக்க முடியாது. மாறாக அவன் புயலே அடித்தாலும் அசைவுகள் கொடுக்காத மலையாக இருக்க வேண்டும்.
சகோதரி தவக்குல் கர்மான் செய்த காரியம் தவறுதான் என்று சிந்திக்கும் மனநிலை கொண்ட எம் சமூகம் அவர் பற்றிய நல்லெண்ணங்களை விதைக்க மறுப்பதேன்?

மனிதர்களிடம் நல்ல பண்புகளையே பார்க்க வேண்டும். இது நபிகளாரின் வாழ்க்கையின் மூலம் நாம் பெற்றுக் கொண்ட படிப்பினை. அவர் ஏன் மங்கள விளக்கேற்றினார் என்பதற்கான பதில் அவரிடமிருந்தே வர வேண்டும். மாறாக நாம் வீணாக கற்பனைகளைப் பேசி தீமைகளை சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.
இறைவன் அனைவரையும் நல்வழியின் பால் செலுத்தி ஈருலகிலும் வெற்றி பெற துணை செய்யட்டும்.

அனீஸ் பின் அலி முஹம்மத்.
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

(கொள்கைவாதங்களுக்கு அப்பாற்பட்டது)
Disqus Comments