இந்த நவீன யுகத்தில் , சமூக , பொருளாதார , அரசியல் , நாகரிக, கலாசார முன்னேற்றங்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கும் பாரிய பங்களிப்புகள் இருக்கின்றன என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்து இருக்கவே மாட்டாது ; எனினும் எவ்வாறு ஒரு பக்கத்தில் முன்னேற்றம் காணப்படுகின்றதோ அவ்வாறு பல பின்னடைவுகள் மற்றும் வீழ்ச்சிகள் ஏற்படுவதற்கும் இச்சமூக வலைத்தளங்களே காரணிகளாக மாறிவருகின்றன .
இன்றைய கால சமூகவலைத்தளங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையிழந்து காணப்படுவதற்கு பின்வரும் சில காரணிகள் முக்கியம் வகிக்கின்றன .
தற்காலத்தில் ஒருவர் எழுதும் ஆக்கம் வேறொருவரின் பெயரில் வலம் வந்து கொண்டிருக்கின்றது , இவ்வாக்கதின் உண்மையான உரிமையாளர் யார் என்று அடையாளப் படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது எனில் எவ்வளவு தூரம் இச்சமூக வலைத்தளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன !!
அவ்வாறே ஓர் இமாம் அல்லது அறிஞர் கூறிய கருத்துக்கள் தாம் கூறியது போன்று சிலர் பகிர்வதால் அனைத்தும் இடியப்ப சிக்கல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என்று கூறினாலும் மிகையாகாது .
இன்று செய்திகள் , கருத்துக்கள் உறுதித் தன்மையை இழந்துள்ளன , ஒரு தீயவனை நல்லவனாகவும் , நல்லவனை தீயவனாகவும் சித்தரித்து அவ்வாறே மக்கள் மன்றத்தில் அடையாளப் படுத்தும் ஓர் அவல நிலையும் அதிகமாக இவ்வலைத்தளங்கள் மேற்கொள்கின்றன , எழுத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு மொழித் திறன் குன்றி விரும்பியவாறு எழுத்துப் பிழைகளோடு ஆக்கங்கள் பகிரப்பட்டு , விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன , சில வேளை எழுத்துக்களில் நம்பிக்கையிழந்து மக்கள் உண்மையான செய்தியையும் போலி என நினைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் .
ஆகையால் மேற்கூறப்பட்ட சிக்கல்கள் ஏற்படாமலிருக்க எழுத்துக்கள் முறையானதாகவும் , உறுதித் தன்மை கொண்டதாகவும் , உண்மையானதாகவும் அமைந்தாலே முடியும் . சமூக வலைத்தளங்கள் , மற்றும் அச்சு , மின்னியல் ஊடகங்கள் பக்கசார்பின்றி நடுநிலையாக செயற்படும் பொழுது தான் சமூகம் சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் இல்லையேல் போலிகள் உண்மைகளின் இடங்களை ஆக்கிரமித்து மக்களை பிற்போக்கான சிந்தனைக்கு கொண்டு சென்று விடும் என்பதில் சந்தேகம் இல்லை . ஊடகங்கள் , சமூக வலைத்தளங்கள் போன்றவற்றிற்கு மக்களுக்கு சரியான தகவல்களை அளிப்பது என்பது பாரிய கடப்பாடாகும் . காழ்ப்புணர்வின்றி நடுநிலை வகித்து எந் நேரமும் உண்மையை உரக்கச் சொல்வதும் போலியை போலியென அடையாளப்படுத்துவதும் அவற்றின் முக்கிய வகிபாகங்களில் உள்ளடக்கப்பட வேண்டியவையே .
அறிவு தர்மம் அல்லது அமானிதத்தை சரியாக பேணி , கண்மூடித்தனமாக விமர்சிக்காது நடுநிலையாக சிந்தனை செய்து பக்கசார்பின்றி உள்ளால் உள்ளபடி செய்திகள் , தரவுகள் , தகவல்கள் , வழிகாட்டல்கள் போன்றவற்றை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களை துஷ்பிரயோகம் செய்யாது உரிய முறையில் விளிப்பூட்டி இவற்றால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முயல்வோம் .
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம் - பாலாவி