Thursday, April 28, 2016

ஆட்டுக்குட்டியுடன் ஒரு தேசியத் தலைவா். சாரம் உடுத்து ஹெல்மட்டுடன் மற்றொரு தேசியத் தலைவா்.

(சோனகா்.காம். - அ.நவாஸ்) நபி வழியில் தம் தலைவர் ஆட்டுக்குட்டியைக் கட்டியணைத்துக் கொண்டார் என்று ரவுப் ஹக்கீமின் விசிறிகள் இஸ்லாத்துக்கே புது விளக்கம் கொடுத்து ஓய முன்பதாக இதற்கு கவுன்டர் அட்டாக் ரிசாத் பதியுதீனின் பக்கத்திலிருந்து எப்படி வரப்போகிறது எனும் எதிர்பார்ப்பை நபி வழியில் இல்லாவிட்டாலும் நபித்தோழர், கலீபா உமர் (ரலி) வழியில் நிறைவேற்றிய சந்தோசத்தில் இருக்கிறார் ரிசாத் பதியுதீன்.

அதுவும் மிக அரிதாக அழுக்கு T-ஷேட்டும் சாரமுமாக கஷ்டப்படும் குடும்பங்களை கையில் ஹெல்மட்டுடன் சென்று பார்த்து வந்து தனது இஸ்லாமிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியுள்ளதாக தற்போது அவரது விசிறிகள் புளகாங்கிதம் அடைந்துள்ளனர். இதை ஆங்கிலத்தில்  PR “Stunt” என்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும் போது ரணிலின் காலில் வீழ்ந்தாவது நடிப்புத்துறைக்கு ஒரு அமைச்சைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது. ஆனாலும் ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே முட்டாள் என்பதால் இந்த நடிப்பையும் நம்பும் பொது மகனைத் தான் நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

துரதிஷ்டம், பொது மகனுக்குத் தெரிவில்லாத நிலை. அன்றைய சமூகத்தில் தனித் தமிழீழம் மலர்ந்து விடுமோ என்கிற அச்சம் அதிகமாக இருந்ததால் வடக்கிலும் கிழக்கிலும் மாற்று மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அலட்சியம் காணப்பட்டது.

காலப் போக்கில் இன்று ஆங்கில மொழியின் அவசியம் உணரப்பட்டிருக்கும் நிலையில் அதன் பால் எமது சமூகம் ஈர்க்கப்படுகிறது. ஆனால் முழுமையாக இன்னும் பயணிக்கவில்லை. இது ஒரு புறம் நிற்க, இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்த்தை வழங்கும் கடமை புறக்கணிக்கப்பட்ட இலங்கையின் கடந்த காலத்தைப் பற்றி இனி பேசுவதில் பலனில்லை. எனவே, தற்போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றத்தை நோக்கிச் செல்வதாகக் கூறும் இந்த அரசின் சூழ்நிலையில் சமூகத்துக்குத் தேவைப்படும் மொழியறிவும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

வாழ்வாதரத் தேடலைப் போன்று கல்வியறிவின் தேடலுக்கும் முக்கியம் கொடுக்கப்படாததன் விளைவில் தான் 21ம் நூற்றாண்டில் கூட ஆட்டைக் கட்டிப்பிடித்தும், சாரத்தைக் கட்டி பதில் கொடுத்தும் முஸ்லிம் தலைவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு 1400 வருடங்கள் பிந்திய வரலாற்றைக் ‘கற்றுக்கொடுக்க’ முனைகின்றனர். இது அவர்கள் தவறுமில்லை. ஏனெனில், தங்கி வாழும் அரசியல் திணிப்பிலிருந்து விடுபட முடியாத பொருளாதார சூழ்நிலையும் ஒரு வகையில் குறிப்பாக வட-கிழக்கின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள் மீது தாக்கம் செலுத்துகிறது.

எனவே, சூழ்நிலைக் கைதிகளின் விடுதலை வீரர்களாகத் தம்மை சித்தரித்துக் கொள்வதில் எந்தக் குறையுமில்லாமல் ‘முஸ்லிம்’ அரசியல்வாதிகள் தமது வகிபங்கை வழங்குகின்றனர்.

மறுபக்கம் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்ள மறுப்பதே முஸ்லிம் சமூகத்தின் பலவீனமாக இருக்கும். தேர்தல் காலத்தில் தொப்பியை அணிந்து கொண்டால் போதும் எனும் அங்கீகாரத்தை மக்கள் வழங்கி வருவதனால் , சில நாட்களுக்கு முன்பாக நல்லாட்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரப் போகிறோம் என போலிக் கோஷமிட்டு, தேசியப் பட்டியலுக்காக 17 மில்லியன் செலவழித்து அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஜிஜி கட்சிக்காரர் ரஹ்மானும் தொப்பியைப் போட்டு வீதியில் இறங்கிய கண்கொள்ளாக் காட்சி நடந்தேறியது.

தேர்தல் நெருங்கிய பின் தான் ரவுப் ஹக்கீம் தொப்பியணிவார், அதுவரை அவர் பெண்களின் கையைப் பிடிப்பதிலிருந்தும் கட்டியணைத்து டிஸ்கோ தெக்கில் ஆடுவது வரை எல்லாமே விதிவிலக்கோடு அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சட்ட திட்டம். இல்லையென்றால் அவரை இன்னம் ‘முஸ்லிம்’ காங்கிரஸ் எனும் பெயர் கொண்ட கட்சிக்குத் தலைமை தாங்க எம் மக்கள் அனுமதிப்பார்களா? ஆதலால் அவரைப் பின்பற்றி அவரது விசிறிகளும் அவ்வழியில் செல்கிறார்கள்.

அது போலவே ரிசாத் பதியுதீன், தனது கோட்டையைக் காப்பாற்ற ரொக்கத்தை வீசி ராக்கெட் வேகத்தில் இனவாதிகளுடன் நட்புப் பாராட்டி வருகிறார். தேவையற்படும் போது கோழிச் சண்டைக்கு அது தான் ஏதுவாக அமையும். இல்லையென்றால் ஞானசாரவிடம் கேட்ட 500 மில்லியனை கை விட்டிருப்பாரா?

இந்தக் கேள்வியைக் கேட்டு, எப்போதாவது கிடைக்கப் போகும் வீட்டை இழப்பதற்கு மறிச்சுக் கட்டிக் கடைநிலைக் குடிமகன் தயாராக இல்லை. எனவே அவனும் மௌனம் காக்கிறான். இந்த சூழ்நிலையின் பலனை அனுபவிக்கும் இரு தலைவர்களும் அடிக்கடி இவ்வாறு அதிரடி ஸ்டன்களை நிகழ்த்தித் தமது கீபோர்ட் வீரர்களை மெயசிலிர்க்க வைக்கிறார்கள். ஆனால் சத்தமில்லாமல் பல மாடிக் கட்டிடங்களும் கப்பல்களும் மலேசியாவிலும் மன்னாரிலும் கொழும்பிலும் சத்தமில்லாமல் எழுந்து வருகிறது.

கடைநிலைத் தொண்டனின் வயிறு ஏதோ வழியில் நிரம்பும் வரை அவனைப் பொறுத்தவரை இது அவசியமற்றது. ஆனால் மறிச்சுக் கட்டி எனும் ஆயுதமும் கரோயார மாவட்டமும் முஸ்லிம் அரசியல் ஆடுகளத்தில் ‘விற்பனைப் பொருட்கள்’ என்பதை காலம் உணர்த்தியே ஆகும்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான காலம் நெருங்குவதால் இன்னும் பல நாடகங்கள் முஸ்லிம் அரசியலின் ஆடுகளத்தில் விரைவில் அரங்கேறும்!


Disqus Comments