Saturday, April 30, 2016

சினிமா மோகத்தினால் சீரழியும் இஸ்லாமிய சமுதாயம் !


~ அ(z)ஸ்ஹான் ஹனீபா ~ உலகில் அதிகளவில் மக்களை தம் பக்கம் ஈர்த்து அவர்களை திசை திருப்பும் ஒரு துறையே சினிமாத் துறை. சினிமா இன்று படிப்பினைகளைக் கொடுக்கின்றதோ இல்லையோ நன்றாக சீர்குலைவுகளையும் அனாச்சாரங்களையும் மக்கள் மன்றத்தில் அரங்கேற்றுகின்றது.  அந்த வகையில் ...

இன்று தமது சொந்த பிள்ளைகளை profile படங்களாக இடாது எங்கோ சினிமாவில் நடித்த பிள்ளையை தாம் உபயோகிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களில்  profile picture களாக இட்டிருக்கும் ஒரு சில பகுத்தறிவுள்ள ஜீவன்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இதிலிருந்து எந்தளவு சினிமா தாக்கம் செலுத்துகின்றது என்பதை ன்றாக உணர முடிகின்றது .


தமது பிள்ளையை விட சினிமாக் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சினிமாவின் அதீத மோகத்தினை பறை சாற்றும் செயல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . இதையும் தாண்டி ஒரு சிலர் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களையும் profile picture ஆக வைத்திருக்கின்றனர் . இவர்களுக்கு பகுத்தறிவு இருக்கின்றதா என்று யோசிக்கும் அளவுக்கு இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருப்பது பெரும் வேதனையளிக்கின்றன . சின்னத் திரை, வெள்ளித் திரைகளில் இந்த நடிகர், நடிகைகள் கதாநாயர்களாக விளங்கினாலும் நிஜ வாழ்வில் தோற்றிருப்பதை வரலாறுகள் சான்று பகர்கின்றன. தற்கொலைகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த நடிகர்களே விளங்குகின்றனர் எனில் மிகையாகாது  .

மேற்குறித்த நடிகர் நடிகைகள் தமது இலாபங்களுக்காக நடிப்பை தொழிலாக செய்பவர்கள், அவர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து விடை பெற்று விடுவர். ஆனால் ஒரு சில சினிமா மோகம் பிடித்தவர்கள் அந்த நடிகர்களின் நடிப்பை நிஜ வாழ்வில் வாழ்வாக அமைத்து சுற்றுகின்றனர். அவர்களது உடை நடை, பாவனை, பேச்சு முதற்கொண்டு அனைத்திலும் நடிகர்களை அணுவும் பிசகாது  பின்பற்றுகின்றனர். இவர்கள் உண்மையில் கைசேதத்திற்குரியவர்கள்; ஏனெனில் பின்பற்றத்தகுந்த ஓர் அழகிய முன்மாதிரியைக் கொண்ட தூதர் ஒருவரை எமக்கு Hero வாக இறைவன் அமைத்துத் தந்திருக்கும் பொழுது மாற்று மதத்தவனை Hero வாக எடுத்துக் கொள்வது எந்த வகையில் நியாயமாகும்.

நபியவர்கள் தாடி வைக்கும் படி கூறிய கட்டளைகள் எமக்கு எடுத்துக் கூறப்பட்ட பொழுது புறக்கணித்த அதே உள்ளங்கள், தமது நடிகன் தாடி வைத்ததும் அதைக் கண்டு ரசனையின் உச்சத்தில் சென்று தாடியை அவ்வாறே பிரதி பண்ணுவதை அவதானிக்க முடிகின்றது. ஆக முழுக்க முழுக்க இந்த சினிமாத் தலைவர்களின் மோகம் வெளிப்படையாக உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகின்றது . 

தமது உவப்பான நடிகன் கிழிந்த ஆடையை நாகரிகம் என்று அணிந்தாலும் அதையும் கண்மூடித்தனமாக பின்பற்றி சந்தோசமாக அணிந்து தெருக்களில் சுற்றும் ஜடங்களும் இருக்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.
 
இந்த சினிமா மோகம் பெரியவர் உட்பட சிறுவர்களிலும் அதிகம் தாக்கம் செலுத்தி வருகின்றது . தற்காலத்தில் ஆண்களின் கல்வி வீதம் குறைவடைவதற்கு இதுவே மூலக் காரணி என்று கூறினாலும் பொருத்தமாகும். ஏனெனில் அந்தளவு இது அநேகரின் வாழ்வை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இன்று வாலிப சமுதாயம் நேரம் செலவிடும் ஒரு துறையாக சினிமாத் துறையை தேர்ந்தெடுத்திருக்கின்றனர் . எங்கு பார்த்தாலும் குழுக்குழுவாக சேர்ந்து படம் பார்ப்பது, ஒரு சில வேலையில்லா வாலிபர்களின் அத்தியவசிய வேலையாக இதுவே மாறியிருக்கின்றது. பாவத்தை தனிமையில் செய்து விட்டு முகநூலில் படம் பார்ப்பதாக பதிவிடும்  ஒரு சில புத்திசாலிகளுக்கு like இடும் விவேகிகளும் இருப்பதானது, இஸ்லாத்தை மதிப்பதன் லட்சணம் சமூக மன்றத்தில் நன்றாக தண்டவாளம் ஏற்றப்படுகின்றது  . 

சினிமாக்கு அடிமைப்பட்ட சமுதாயம் என்றும் முன்னேறியதாக சரித்திரமே கிடையாது. சுமார் ஒரு 10 வருடங்களுக்கு முன் மக்ரிப் நேரமானதும் வீடுகளில் அல் குர்ஆன் ஓதும் சத்தங்கள் காதுகளுக்கு இதமாக ஒலித்துக் கொண்டிருந்தன  , ஆனால் இன்றோ அனைத்தும் தலைகீழாக புரண்டிருக்கின்றன . அல் குர்ஆன் ஒலிகள் கேட்ட வீடுகளெல்லாம் இன்று திரையரங்குகளாக  மாறியிருக்கின்றன . குடும்பங்களில் அனைவரும் எவ்வித வெட்கமுமின்றி ஒன்றா சேர்ந்து படங்களை கண்டு களிக்கும் காட்சிகள் இன்று அசாதாரணமாகிவிட்டன . 
குடும்ப உறுப்பினர்கள் இறைக்கட்டளையான தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ இல்லையோ படம் பார்ப்பதை தவறாது செய்து வருவதில் மும்முரம் காட்டுகின்றனர். 
எங்கே போகின்றது எமது  இஸ்லாமிய சமுதாயம் ! 

சினிமாவை நிஜ வாழ்வில் கொண்டு வர நினைத்தமையால் அனேக தவறான தொடர்புகள், கள்ளக் காதல்கள், சமுதாய கலாசார சீர்குலைவுகள், கொலை, கொல்லை, ஏமாற்றுக்கள், ஆபாசங்கள், அரைகுறை ஆடைக் கலாசாரம், மது போதைகள், புகைத்தல், கற்பழிப்பு போன்ற இன்னோரன்ன அனாச்சாரங்கள் சமூக மட்டத்தில் தலைவிரித்தாடுவதோடு அநேகரின் வாழ்வை ஆக்கிரமித்து சீரழித்துக் கொண்டிருக்கின்றன . 

சகோதரர்களே, வாலிப நண்பர்களே! எமது வாழ்வு மிகக் குறுகிய ஆயுளைக் கொண்டது. இருக்கின்ற காலத்தில் எமது நன்மையின் பட்டோலையை கணமுள்ளதாக ஆக்க முயல்வது எமது கடமையும் பொறுப்புமாகும். நபி முஹம்மத் (ஸல்) அவர்களே உலகத்தார் அனைவருக்கும் Role Model Hero . நபியின் வாழ்க்கையை புரட்டி புரட்டி படித்தால் எமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நிறப்பமாக பெற்றுக் கொள்ள முடியும் .  ஆகையால் இன்றிலிருந்து சினிமா நடிகர் நடிகைகளை Profile Picture ஆக இடுவதைத் தவிர்ப்பதொடு சினிமா மோகத்திலிருந்து முற்றும் முழுவதுமாக விடுபட முயல்வோம் . ஏனேனில் சினிமாவில் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை . 

ஆக நபியை அனைத்திலும் பின்பற்றி ஏனையோரை பின்பற்றாது நேர்வழியில் செல்வதற்கு அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன் .


நட்புடன் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம்- பாலாவி  
Disqus Comments