Tuesday, May 17, 2016

அனர்த்தங்களினால் பாதிப்படையும் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 225 ரூபா ஒதுக்கீடு


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் எந்தவொரு அவசர அனர்த்த நிலமைகளையும் எதிர்கொள்வதற்கு அனைத்து பிரிவினரும் தயாரான நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு விரைவில் நிவாரணங்களை வழங்குவது சம்பந்தமாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்படையும் நபரொருவருக்காக நாளொன்றுக்கு ஒதுக்கும் நிதியை அதிகரிப்பதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டுளள்து. 

குறித்த 150 ரூபாவை 225 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

அந்தக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை அவசர பத்திரமாக கருதி இன்று முன்வைக்குமாறு ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். 

மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களை அடையாளம் கண்டு அது தொடர்பாக மக்களை அறிவுறுத்துவதற்காக விரைவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் இடர்கள் குறித்து தொடர்ச்சியாக மக்களை விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். 

அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்காக தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நட்டஈடு வழங்கப்பட உள்ளதுடன், சொத்து சேதங்களுக்காக 25 இலட்சம் ரூபா வரை நிதியுதவி வழங்கப்பட உள்ளது. 

அத்துடன் இயற்கை அனர்த்தம் காரணமாக திடீர் மரணங்களுக்காக ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும், மீனவர் ஒருவரின் மரணத்திற்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. 

(அத தெரண தமிழ்)
Disqus Comments