Sunday, May 15, 2016

தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு பஸ் சங்கங்கள் கோரிக்கை

(NFT) ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கான எந்தவித ஆயத்தங்களும் முன்னெடுக்கப்படவில்லை என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், 2008 ஆம் ஆண்டின் பின்னர் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர கூறினார்.
பயணிகளிடம் குறைந்த கட்டணங்களை அறவிட்டு, ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்வதே அமைச்சின் எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
வேறு வருமான மார்க்கங்களைத் தேடுவதன் ஊடாக, ரயில் கட்டண அதிகரிப்பின்றி சேவையை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கட்டண அதிகரிப்பைக் கோரி 2 பஸ் சங்கங்கள் விண்ணப்பித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார்.
இவற்றுள் ஒரு நிறுவனம் 10 வீத அதிகரிப்பையும், மற்றைய நிறுவனம் 25 வீத கட்டண அதிகரிப்பையும் கோரியுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும் வருடாந்தம் ஜூன் மாதமளவிலேயே பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் பஸ் நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை தற்போது கோரியுள்ளபோதிலும், அரசாங்கம் இதுவரை அதற்கு எவ்வித இணக்கத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Disqus Comments