(முஹம்சமது இன்பாஸ்) தேசமான்ய முஹம்மத் ஹாஜியார் அவர்கள் - N.M.TRAVELS , மற்றும் கதீஜா தொண்டு அமைப்பு ஆகியவற்றின் ஸ்தாபகர் ஆவார் .
இவரின் மகன் சில வருடங்களுக்கு முன்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் பல இலட்சம் செலவு செய்தும் அது பலனளிக்காத நேரத்தில் இறுதியாக சிகிச்சை பெற மகரகமை புற்று நோய் வைத்தியசாலைக்கு வந்துள்ளார். அங்கு வந்ததன் பின்பு அங்கு சேவை இடம்பெறும் விதம் , வைத்தியர்கள் தாதியர்களின் அனுசரிப்பு என்பவற்றை கண்டு மனம் நெகிழ்ந்தவராய் இந்த வைத்தியசாலையை உலகின் தரம் வாய்ந்த வைத்திய சாலையாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக மனதில் பதிக்கிறார்.
இதன் அடிப்படையில் இங்கு ''பெட் ஸ்கேனர்'' எனும் இயந்திரம் ஒன்றின் தேவை இருப்பதையும் அதனை பெற 20 கோடிகள் தேவை என்பதையும் அறிகிறார்.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் மட்டுமே இருக்கும் இந்த இயந்திரம் மகரகமை வைத்தியசாலையிலும் இருந்தால் நோயாளர்களுக்கு எவ்வளவு பெறுமதியான விடயம் என்பதை உணர்கிறார். தனியார் வைத்தியசாலைக்கு இந்த பரிசோதனைக்கு சென்றால் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை இந்த இயந்திரத்தின் விலையினை வைத்து அறியலாம்.
எனவே இதனை கதீஜா நிறுவனம் மூலம் செயல்படுத்துவது எனும் நோக்கில் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். நேற்றுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது. .
ஆம் , ஒரு கட்டிடம் கட்டவே பல காலங்கள் எடுக்கும் நமது சமூக அமைப்புக்கு மத்தியில் 20 கோடி ரூபாய்கள் சேமிப்பது என்பது இமாலய இலக்கு தான் ஆனால் இந்த தூய எண்ணம் நிறைவேறி உள்ளது .அதுவும் ஒரு வருடம் எனும் காலம் குறிக்கப்பட்ட விடயம் ஆறு மாதத்தினுள் முடிவுக்கு வந்துள்ளது
மதீனாவில் ஹோட்டல் நடத்தும் ரவூப் ஹசன் எனும் ஒரு கொடைவள்ளல் 50 இலட்சங்களை வழங்கியதன் மூலம் இந்த திட்டத்தை நேற்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
ஆறு நிமிடங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் இதற்கான பணம் வைப்பில் இடப்பட்டுக்கொண்டே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
முஹம்மத் ஹாஜியார் இந்த திட்டத்தோடு ஓயவில்லை இன்னும் ஒரு மிகப்பெரிய திட்டமுள்ளது அதற்கு செலவு 25 கோடியாகும் . இன்ஷா அல்லாஹ் அதனையும் செய்வேன் என்கிறார்.
இவரின் சமூக சிந்தனை , தைரியமான எண்ணம் , துணிந்து கருமம் ஆற்றும் செயல் எல்லாமே நமக்கு ஒரு முன்மாதிரி ஆகும்.
அல்லாஹுத்தாலா அன்னாரையும், அவரோடு தோளோடு தோள் நின்று கருமம் ஆற்றிய அனைவரையும் பொருந்தி கொள்வ்வானாக ! அவர்களுக்கு மென்மேலும் செல்வத்தை வழங்குவானாக !!