Saturday, June 11, 2016

கற்பிட்டியில் கடற்கரையோர பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை - வடமேல் மாகாண சபை உறுப்பினா் நியாஸ்...

(TM-ரஸீன் ரஸ்மின்) புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசத்தில் கடற்கரையோர பூங்காவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இந்தப்பிரதேச மக்களும் சிறுவர்களும் மாலை நேரத்தை சந்தோஷமாக கழிப்பதற்காக கற்பிட்டி கண்டல்குழி பகுதியில் கடற்கரையோர பூங்காவொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பெரியவர்கள் மாலை நேரத்தில் ஓய்வாக இருப்பதற்கும், சிறுவர்கள் சந்தோஷமாக விளையாட்டில் ஈடுபடுவதற்கும் ஏற்ற வகையில் குறித்த கடற்கரைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. 

எனது கோரிக்கைக்கமைய சிறு கடற்கரையோரமாக அமைக்கப்படவுள்ள குறித்த திட்டத்திற்கு நகர திட்டமிடல் அமைச்சு, மாகாண சபை, கற்பிட்டி பிரதேச சபை, பிரதேச செயலகம் என்;பன இதற்கான நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளன. 

அத்துடன், குறித்த பூங்காவில் வருகை தரும் மக்கள் இருப்பதற்கு தேவையாக இருக்கைகளை கொள்வனவு செய்வதற்கான நிதியை மு.கா பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் ஒதுக்கீடு செய்யவுள்ளார். இத்திட்டங்கள் தொடர்பான திட்ட வரைபுகள் தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். 

அத்தோடு பூங்கா அமைக்கப்படவுள்ள கடற்கரையோரத்தை அண்டிய பகுதியில் கண்டல் தாவரங்களும் நடப்படவுள்ளன. கற்பிட்டி பிரதேச சபையுடன், வனப் பாதுகாப்புத் திணைக்களமும் இதற்கான உதவிகளை  செய்வதற்கு முன்வந்துள்ளன” என்றார்.
Disqus Comments