Thursday, June 30, 2016

உம்மா நான் சத்தமா கேட்டா அல்லாஹ்வுக்கு நல்லா கேட்கும் தானே! கண்ணீரைக் கசிய வைக்கும் சம்பவம்.

உம்மா நான் சத்தமா கேட்டா அல்லாஹ்வுக்கு நல்லா கேட்கும் தானே! அப்ப அவசரமாக அல்லாஹ் தருவான் தானே ' என்று தமது மகள் கூறியதாகக் கூறி   கண்ணீர் விட்டழுத சகோதரி.

நேற்று (28.06.2016) மாலை நேன்பு திறந்தவுடன் எனது நன்பர் (மௌலவி) Saheel Zahir ஸஹீல் ஸாஹிர் அவர்களும் நானும் வெல்லம்பிட்டிய பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களைச் சந்திக்கச் சென்றோம். ஏற்கனவே அவர்கள் சுய கௌரவத்தின் காரணமாக யாரிடமும் கை நீட்டாமல் மிக வறுமையுடன் இருக்கிறார்கள் என சிலரிடமிருந்து கிடைத்த தகவல்களிடன் படி எவ்விதத்திலும் அறிமுகமற்ற அவர்களை வீடு தேடிச் சென்றோம்.  ஒரு குடும்பம். அழகான குடும்பம். மிகவும் சிரமப்பட்டுகொண்டிருந்தார்கள். சமைக்க கூட பாத்திரங்கள் இல்லை. நோயாளித் தாய். 

ஏன் தாராளமாக பல நிறுவனங்கள் உதவிகள் செய்தார்களே! நீங்கள் ஏன் அவைகளைப் பெற்றுக்கொளளவில்லை என்று கேட்டோம். அதற்கு அந்த சகோதரி 

'வரிசையில் நிற்க வேண்டும். அப்படி நின்று கௌரவம் பார்க்காமல் கைநீட்டி வாங்கினாலும் அதனை போட்டோ பிடித்து விடுவார்களே என்ற அச்சம் தான் அவர்களிடம் போய் வாங்க எமது மனம் மறுத்தது. மட்டுமல்ல எம்மை அறிமுகமற்றவர்கள் பலர் அவ்வப்போது சில உதவிகளைச் செய்தாலும் எமக்கு அறிமுகமானவர்கள் நாம் கஷ்டத்தில் விழுந்தவுடன் யாரும் எம்மையோ எமது குழந்தைகளையோ பார்க்க வரவில்லை. நான் மட்டுமல்ல என்னைப் போன்று கௌரவம் பார்த்து வறுமையோடும், கஷ்டத்தோடும் பலர் இங்கு இருக்கிறார்கள். 

பாதிக்கப்பட்ட அந்த நேரத்திலே எல்லோரும் வந்தார்கள் கொடுத்தார்கள். இப்பொழுது யாருமில்லை.' என்று கூறிவிட்டு 'எமது குழந்தைகளும் நோன்பு நோற்றுள்ளார்கள். எனது மகள் (6 அல்லது 7 வயது மதிக்கத்தக்க தனது மகளைக் காட்டி) இன்று மாலை நோன்பு திறக்கும் பொழுது மிகச் சத்தமிட்டு துஆ கேட்டுக் கொண்டிருந்தாள். (பெருநாள் ஆடை வேண்டும். யா அல்லாஹ் என்று) ஏன் இப்படிச் சத்தமாகக் கேட்க வேண்டும் என்று நான் கேட்ட போது ' உம்மா நான் சத்தமா கேட்டா அல்லாஹ்வுக்கு நல்லா கேட்கும் தானே! அப்ப அவசரமாக அல்லாஹ் தருவான் தானே ' என்று தமது மகள் கூறியதாகக் கூறி அந்த சகோதரி கோவென்று தேம்பி அழுது விட்டாள்.

என்னுடன் வந்திருந்த எனது நண்பனுக்கும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏதோ நான் அவர்களுக்குக் கொடுக்க கொண்டு சென்றிருந்த ஒரு சிறிய தொகைப் பணத்தை கண்ட அவர் இல்லை இவர்களுக்கு இதனைக் கொடுங்கள் எனச் சொல்லி ஒரு பெரிய தொகை; பணத்தை என்னிடம் கொடுத்தார். அதனை குழந்தைகளிடம் கொடுத்து 'பெருநாளைக்கு ஆடை வாங்குங்கள்! என்று சொன்ன போது அவர்களின் கண்களில் ஏற்பட்ட ஆனந்தம் வார்த்தைகளினால் கூற முடியாதவைகள்.


• நாம் எப்பொழுதம் எமது தர்மங்களை அவர்களைத் வீடு தேடிச் சென்று இரகசியமாக கொடுக்க முயற்சிப்போம்!

• ஆவணப்படுத்தலுக்காக நாம் எப்பொழுதும் எமது இது போன்ற தர்மங்களையோ அல்லது நிகழ்வுகளையோ போடடோ பிடிப்பதுண்டு. ஆனால் இதனால் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் உணர்வது குறைவு. எனவே இவைகளையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
Disqus Comments