(சுஐப் எம்.காசிம்) நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள்
எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன்
கிரியெல்ல, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பல்கலைக்கழக
மானிய ஆணைக்குழுவின் உபதலைவர், பேராசிரியர் மொஹான் டி சில்வா ஆகியோர்
பங்கேற்றிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் இன்று (30/06/2016) தீர்வு எட்டப்பட்டது.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளுக்கும் ஏற்பாட்டுக்கும் அமைய அமைச்சர்
லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்தக் கூட்டம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள்
தாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம்
எடுத்துரைத்திருந்த போது, அவரின் ஏற்பாட்டுக்கிணங்க பாராளுமன்றத்தில் மாணவர்களின்
பிரதிநிதிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். இந்தக்
கூட்டத்தின் தொடர்ச்சியாகவே அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் இன்று
மீண்டும் ஆராயப்பட்டு தீர்வுகாணப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் உபவேந்தர்கள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும்
பல்கலைக்கழகங்களில் உள்ள முஸ்லிம் மஜ்லிசின் பிரதிநிதிகள், மானிய ஆணைக்குழுவின்
உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர, ருஹுணு, பேராதனை, ரஜரட்ட. தென்கிழக்கு, கிழக்கு,
யாழ்ப்பாணம், ஊவா வெல்லஸ்ஸ, மொரட்டுவ ஆகியவற்றில் கற்கும் முஸ்லிம் மாணவர்களின்
பிரதிநிதிகள், தத்தமது பல்கலைக்கழகத்தில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை
எடுத்துரைத்த போது, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உடனுக்குடன் பல்கலைக்கழக
வேந்தர்களுடனும், பிரதிநிதிகளுடனும் ஆலோசித்து, பிரச்சினைகளை மிகவும் சாவதனமாகத்
தீர்த்து வைத்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனும் மாணவர்களின் பிரச்சினைகள்
தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்வைத்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும்
வழிவகைகளைக் குறிப்பிட்டார்.
தென்னிலங்கையில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஐவேளை தொழுவதற்கான
வசதிகளை ஏற்படுத்தும் வகையில், பிரத்தியேக தொழுகை அறை ஒன்று இல்லாத குறை
மாணவர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட போது, அங்கு அதற்கும் தீர்வு எட்டப்பட்டது.
அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆத் தொழுவதற்கு வசதியாக 12.00 - 2.00 மணி வரை பரீட்சைகளோ, பாடநெறிகளோ நடாத்தப்படுவதை
தவிர்த்துக்கொள்வது என்ற பொதுவான சுற்றறிக்கை ஒன்றைத் தயாரித்து, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானிய
ஆணைக்குழுவினால் அனுப்பிவைப்பது எனவும் முடிவு எட்டப்பட்டது. முஸ்லிம்கள் கொண்டாடும் பெருநாள் தினத்துக்கு முன்பும்,
பெருநாள் தினத்துக்கு அடுத்த நாளும் பரீட்சைகளோ, பாடநெறிகளோ நடத்த வேண்டாம்
எனவும், முஸ்லிம் மாணவர்கள் அதிகமுள்ள பல்கலைக்கழகங்களில் ஜும்ஆத் தொழுகையை
பல்கலைக்கழகங்களில் நடத்துவதற்கு உரிய வசதிகள் பெற்றுக்கொடுப்பது எனவும்
முடிவெடுக்கப்பட்டது. சில பேராதனை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபு, இஸ்லாமிய
கற்கை நெறிகளில் ஏற்பட்டுள்ள தளர்வு தொடர்பில் ஆராயப்பட்டு, தற்காலிகத் தீர்வு
ஒன்றும் எட்டப்பட்டது.
களனி, ஜெயவர்தனபுர பலகலைக்கழகங்களில் விஞ்ஞான பாடநெறிகளில் கல்வி கற்கும்
தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் விரிவுரைகள் சிங்களத்தில்
நடைபெறுவதால், மொழி ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பரீட்சைகளின் போதும்
சில பாடவினாத்தாள்கள் ஆங்கிலத்துடன் சிங்கள
மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது போன்று, தமிழ் பேசும் மாணவர்களின் மொழி கருதி தமிழ்
மொழிபெயர்ப்பும் இடம்பெறுவதன் மூலமே, உண்மையான திறமைகளை அறிய முடியுமெனவும்
சுட்டிக்காட்டப்பட்ட போது, பொருத்தமான தீர்வு வழங்கப்படுமென பல்கலைக்கழக மானிய
ஆணைக்குழுவின் உபதலைவர் உறுதியளித்தார்.
முஸ்லிம் மாணவிகளில் குறிப்பாக, மருத்துவ மாணவிகளின் உடைகள் தொடர்பில்
ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அங்கு சுட்டிக்காட்டப்பட்ட போது, சுகாதார அமைச்சருடன்
கலந்துரையாடி, இதற்கு சுமுகத் தீர்வு எட்டமுடியும் என்ற கருத்தை அமைச்சர் றிசாத்
பதியுதீன் அங்கு முன்வைத்தார்.
அமைச்சர் கிரியெல்ல இங்கு கருத்துத் தெரிவித்த போது,
இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, மாணவர்களின் கஷ்டங்களை சுமுகமாகத் தீர்க்க உதவிய அமைச்சர் றிசாத்
பதியுதீனுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின்
பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துவைக்க முடியும் என்ற முன்மாதிரியை இன்றைய
கலந்துரையாடல் எடுத்துரைத்துள்ளது. இவ்வாறான கலந்துரையாடல்களே மாணவர்களுக்கும்,
பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நல்லுறவு ஏற்பட வழிவகுக்கும் எனவும், இனஐக்கியத்தை
மேம்படுத்த இவ்வாறான முயற்சிகள் பெரிதும் பயன்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தை நன்முறையில் நடாத்தி, மாணவர்களின் பிரச்சினைகளுக்குத்
தீர்வுகாண ஒத்துழைத்த அனைவருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நன்றிகளைத்
தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசியர் நாசிம், ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர், பேராதனை
பல்கலைக்கழக பதில் உபவேந்தர், யாழ் பல்கலைக்கழக
உபவேந்தர் திருமதி. வசந்தி அரசரட்னம், கலாநிதி எம்.இஷட்.எம். நபீர், ருஹுணு
பல்கலைக்கழக பேராசிரியர்களான மபாசியா, கலாநிதி கதீஜா அலி மற்றும் விரிவுரையாளர்கள்
பங்கேற்றிருந்தனர்.