Monday, June 27, 2016

தேசிய கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் திட்டம் றிசாத்தினால் இன்று ஆரம்பம்.

சுஐப் எம்.காசிம் - தேசிய கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் முடிவுக்கிணங்க இன்று (27/06/2016) கொழும்பு, விகாரமகா தேவி பூங்காவில் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தன மரக்கன்று ஒன்றை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அண்மையில் பிரபல பாடகர் இராஜ் விக்கிரமரத்ன, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு மரக்கன்றையாவது நாட்டிக் காட்டட்டும் என்று அவர் சவால் விடுத்தும் இருந்தார். இந்தப் பின்னணியில் சந்தன மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, அமைச்சர் ஹரிசன், மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தென்னகோன் ஆகியோரும் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது நாட்டி வைக்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.  

அத்துடன் நாட்டில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தப் பாரிய வேலைத் திட்டத்தை இன்றே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமன்றி ரோட்டறி கழகத்துடன் இணைந்து, சதொச பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் ஒன்று ஏககாலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நான் இயற்கையை நேசிப்பவன். இயற்கையின் சமநிலை கெடுவதால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை உணர்கின்றோம். கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றம் எமக்கு இதை உணர்த்தியது. எனவேதான் இவ்வாறன முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பணிக்கு அனைவரும் உதவ வேண்டும் எனவும் அவர் கூறினார்.  

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி. தென்னகோன், மேலதிகச் செயலாளர் திருமதி. மல்காந்தி, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஜீவானந்தம், உணவு ஆணையாளர் திருமதி. கிருஷ்ணமூர்த்தி, பொல்கொல்லை தேசிய கூட்டுறவுச்சங்கத் தலைவர் லலித் கங்கவத்த, அமைச்சரின் ஆலோசகர் யூசுப் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்        

   


Disqus Comments