பிரபல தப்ஸீர் ஆசிரியர் ஸெய்யித் குத்ப் அவர்கள் அனர்த்தங்கள் ஏன் வருகின்றன என்பது பற்றி கூறும் போது இரண்டு முக்கிய காரணங்களை முன்வைக்கிறார்.
- பௌதீககாரணிகள்
- ஆன்மீகக் காரணிகள்
மழை தொடர்ச்சியாக பெய்யும் போது ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இம்முறை ஊருகளுக்குள் ஊடுருவிய வெள்ள நீர் விரைவில் வடிந்தோடாமல் இரண்டு மூன்று நாட்கள் தேங்கி நின்றதனை இயற்கையாக நிகழந்தது என கருதுவது சிரமமானது.
பௌதீக காரணிகள்
கடந்த வாரம் பலரின் நேரம் வெள்ளத்திலும் வெள்ளநிவாரப்பணிகளிலுமே கழிந்தது எனக் கூறலாம்.
அப்படியான நிலையில் வெளத்ததில் முழுமையாக வீடு மூழ்கிப் போன ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் இது இறைவனின் சோதனையாக இருக்கலாம் அல்லது இறைவனின் தண்டனையாக இருக்கலாம், இது இறைவனின் ஏற்பாடு நாம் இதனை பொருந்திக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற கருத்தில் கதைத்துக் கொண்டிருந்தார்.
நான் சற்று குறுக்கிட்டு அவரிடம் சில கேள்விகளை கேட்டேன்.
நீங்கள் வீடு கட்டியிருக்கும் இடம் இதற்கு முன்னர் என்னவாக இருந்தது? வயலாக இருந்தது என அவர் பதிலளித்தார். மேலும் முன்னர் வெள்ளம் வந்தால் முதலில் நீரால் நிரம்புவது இந்த வயல் தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நான் அவரிடம் திரும்பவும் கேட்டேன் வயலை நிரப்பியது நீங்கள், நீர் நிரம்பும் பகுதியில் வீட்டை கட்டியது நீங்கள், இப்படி எல்லாவற்றை நீங்கள் செய்துவிட்டு இறைவனின் மேல் பலியை போடுவது ஏன்? என்று அவரிடம் நான் கேட்க அவர் ஏற்றுக்கொள்ளும் வகையிலான எந்த பதிலையும் எனக்கு தரவில்லை.
இந்த சம்பவத்தில் சரி எது? பிழை எது? என்பதனை ஆராய்வதனை விட இம்முறை வெள்ளம் இந்தளவுக்கு பாரிய நஷ்டத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்த காரணம்
இந்த குறிப்பிட்ட நபர் செய்தது போன்ற செயல் நாடு பூராகவும் எல்லா இடங்களிலும் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுதான்.
அதாவது பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் ஆரம்பத்தில் வயல் நிலங்களாகவும், நீர்நிரம்பும் இடங்களாகவும் இருந்தவை. அரசும் இதனைத்தான் இப்பெரும் வெள்ளத்துக்கான முக்கிய காரணமாக அடையாளப்படுத்தியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டு இனிமேல் எந்த வயல் நிலத்திலும் மண் நிரைத்து கட்டிடங்கள் கட்டுவதனை தடை செய்யும் வகையில் விசேட சட்டம் ஒன்றையும் அரசு அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
வெள்ளம் தொடர்பில் சென்ற வாரம் ராவய பத்தரிகையின் முன்னால் ஆசிரியர் விக்டர் அய்வன் தனது அனுபவமொன்றை கீழ்வருமாறு பகிர்ந்துகொண்டிருந்தார்.
“நான் சுனாமி தொடர்பிலான செயலமர்வொன்றில் பங்குபற்றிய சமயத்தில். என் பக்கத்தில் இருந்த ஒரு நபர் மகாவெலி திட்டம் தொடர்பில் ஒரு அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவ்வேளையில் மிகவும் கவலையுடனும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் அவரை என்னால் காண முடிந்தது .
சுனாமி தொடர்பிலான செயலமர்விலிருந்து நான் அவரை வெளியே அழைத்துச் சென்று அவர் சொன்ன விடயங்களில் எனது அவதானத்தை செலுத்தினேன். அந்நபர் வேறுயாருமல்ல இலங்கையில் உருவான முதல்தர பொறியாளலர்களில் ஒருவாரான டெனிஸ் பிரநாந்து. அவர் சில காலம் மகாவலி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
மகாவலி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் எதிர்காலத்தில் வரவிருக்கும் அழிவுகளை கருத்தில் கொண்டு தாம் மகாவலி திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்ததாகவும் அவர் அத்திட்டத்தை எதிர்த்ததற்கான காரணத்தையும் எனக்கு விளக்கினார்.
ஒரு முறை அக்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த JRஜ யவர்தன டெனிஸ்பிரநாந்துவை அழைத்து மகாவலி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றமைக்கான காரணத்தையும் கேட்டுள்ளார். டேனிஸ்பிரநாந்துவும் ஜனாதிபதி JR ஜயவர்தனவும் ஒரே பாடசாலையில் கல்வி கற்றவர்கள். தாம் மகாவலி திட்டத்தை எதிர்பதற்கான காரணத்தை டேனிஸ் அவர்கள் ஜனாதிபதிக்கு சுருக்கமாக விளக்கியுள்ளார்.
மேலும் மலைப்பகுதிகளில் நீர்தேக்கங்களை அமைப்பதாக இருந்தால் பாரிய நீர்தேக்கங்கள் அமைக்காமல் சிரியயளவில் நீர்தேக்கங்கள் அமைக்குமாறு ஜனாதிபதி JR ஜயவர்தனாவிடம் டெனிஸ் கேட்டுள்ளார். ஆனாலும் பொறியியலாளர் டெனிஸ் அவர்களின் ஆலோசனையை ஜனாதிபதி JR ஜயர்வதன பொருட்படுத்தவில்லை. ஜனாதிபதி ஜயவர்தனவின் திட்டப்படியே பாரிய நீர்தேக்கங்கள் அமைக்கப்பட்டன.
கடலால் வரும் பாரிய அழிவுகளைவிட பல மடங்கு பாரிய அழிவுகள் மலைப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்தேக்கங்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என கலங்கிய கண்களுடன் டெனிஸ் அவர்கள் எனக்கு தெரிவித்தார்.
டெனிஸ் சொன்ன விடயங்கள் என்னுள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் அவர் கூறிய விடயத்தின் பாரதூரத்தை இன்னும் சற்றும் ஆழமாக அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் இருக்கும் இத்துறை சார்ந்த சில விஞ்ஞானிகளிடம் சில கலந்துரையாடல்களை நடாத்தினேன். அவர்களும் ஏதோ காணரத்துக்காக இந்த விடயம் தொடர்பில் பெரிதாக பேச விரும்புவதாக தெரியவில்லை.
பொறியலாளர் டெனிஸ் சொன்ன விடயத்தை ஜனாதிபதி JR ஜயவர்தன அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனது ஏன் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
நீர்தேக்கம் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் புவிநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன அப்படியேற்படும் போது அது நீர்தேக்கங்களில் ஏற்படுத்தும் மாற்றம் பாரிய அழிவுகளை கொண்டுவரக் கூடியவை.
இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ள புவியல் தொடர்பில் ஆழமான அறிவு ஏதும் தேவையில்லை. இத்தனை பாரிய அழிவுகளை எதிர்காலத்தில் கொண்டு வரும் என தெரிந்தும் ஜனாதபதி JR ஜயவர்தன டெனிஸ் அவர்களின் ஆலோசனையை தூக்கியெறிய காரணம் அத்திட்டத்தை கைவிட்டுவிடுவதால் அவருக்கு ஏற்படும் அரசியல் நட்டமும் அவரின் பிடிவாதமும் தான். என்று விக்டர் அய்வன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இம்முறை பாரிய அளவு வெள்ளம் வர மிக முக்கிய காரணங்களில் ஒன்று இந்த நீர்தேக்கங்கள் தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. நீர்தேக்கங்களை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் வெள்ளத்தை உருவாக்கி நாட்டுமக்களின் கவனத்தை முக்கிய பிரச்சினைகளிலிருந்து இந்த அரசு திருப்பிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எதிர்தரப்பிலிருந்து எழாமலும் இல்லை.
வெள்ளம் அதிரிக்கும் நேரம் களத்தில் இருந்த பலரும் கூறிய ஒரு விடயம் தான் வெள்ள நீர் வழமைக்கு மாற்றமாக மிக வேகமாக ஓரிரு மணித்தியாலங்களில் பல அடிகள் உயரத்துக்கு வந்தமை, அது மட்டுமல்லாமல் வெள்ள நீர் வடிந்தது கூட வழமைக்கு மாற்றமான முறையிலேயே. அதாவது வழமையில் ஒரேநாளில் நீர் வடிந்துவிடும் ஆனால் இம்முறை இரண்டு மூன்று நாட்கள் வெள்ள நீர் ஒரே மட்டத்தில் தேங்கி நின்றது. இந்த நிலைமைகளை வைத்துத்தான் எதிர்தரப்பினர் தமது கருத்துக்கு வலுச்சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்.
மழை காரணமாக நீர்தேக்கங்களின் கொள்ளவைவிட அதிக நீர் சேரும் போது நீர்தேக்கங்களின் கதவுகளை திறக்க வேண்டிய கட்டாயத்துக்கு அதிகாரிகள் தள்ளப்படுகின்றனர்.
மேலும் நீர்தேக்கத்தால் தாங்கிகொள்ள முடியமானளவு கொள்ளளவுக்கு நீரின் அளவு குறையும் வரை நீர்தேக்கங்களின் கதவை திறந்தே வைக்க வேண்டிருயிருக்கும்.
நீர் தேக்கத்தின் கொள்ளளவைவிட அதிகளவு நீரை நிர்ப்பந்தம் காரணமாக நிறுத்தி வைப்பதனால் முழு நீர்தேக்கமும் பாதிக்கப்படும் நிலையும் உருவாகலாம்
அப்படி நீரின் அளவை குறைக்க நீர்தேக்கத்தின் கதவு நீண்ட நேரமோ அல்லது நீண்ட நாட்களுக்கோ திறந்திருக்கும் போது தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அது மட்டுமல்லாமல் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் நீர்தேக்கத்தின் கொள்ளளவின் அளவை அடையும் வரை வெள்ளம் ஏற்பட்ட பிரதேசங்களில் நீர்மட்டமும் குறையாது.
இதுவே இம்முறை நிகழ்ந்தது என பலராலும் சொல்லப்படுகிறது. நீர்தேக்கங்களின் கதவுகள் திறக்கப்படுவதானாலேயே இத்தனை பாரிய பாதிப்பு, அழிவு ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றால் நீர்தேக்கம் ஏதாவது நிலநடுக்கம் அல்லது வேறு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டால் அதனால் வரவிருக்கும் அழிவை நினைத்தும் பார்க்க முடியாது. இந்த அழிவின் பாராதூரத்தை எண்ணித்தான் பொறியலாளர் டெனிஸ் கண்கலங்கியிருப்பார்.
இம்முறை வெள்ளதில் நாம் சந்தித்த இன்னொரு சவாலை பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். இம்முறை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் அவர்களை மீட்கவும் வந்த மீட்பு பணியாளர்கள் சந்தித்த மிகவும் சவாலான ஒரு விடயம் தான் அசுத்தமானநீர்.
அதிகமான வீடுகள், கட்டிடங்களின் மலசலம் மற்றும் கழிவுகள் ஆற்றை நோக்கியும் நீர்நிலைகளை நோக்கியும் திருப்பப்பட்டிருப்பதால் இம்முறை வெள்ள நீர் கடுமையாக அசுத்தமடைந்த நீராகவே காணப்பட்டது.
களனி கங்கையில் ஒரு படகின் மூலம் சவாரி செய்தால் எங்கள் கண்களாலேயே இந்த துர்பாக்கிய நிலையை கண்டு கொள்ள முடியும். பல வீடுகளிருந்து தமது மலசலகூடத்தின் கழிவை அப்படியே நேரடியாக ஆற்றுக்கு திருப்பிவிட்டிருக்கிறார்கள். வீடுகள் மட்டுமல்ல சில சர்வதேச மல்டிநஷனல் கம்பனிகள் கூட இதே அநியாயத்தை பாரியளவில் களனி கங்கைக்கு செய்து வருகறிது.
இது இறைவன் தந்த அருளுக்கு செய்யும் எத்தனை பெரிய அநியாயம்?
இத்தனை அநியாயங்களையும் மனிதர்களாகிய நாம் செய்துவிட்டு இதனை இறைவனின் செயல் என நாம் கூறுவது எவ்வளவு பெரிய மடத்தனம்.
இப்படி நாம் ஒவ்வொரு விடயமாக ஆராய்ந்து பார்த்தால் எமக்கே புரியும் அனர்த்தங்கள் வருவதற்கான 90 வீதமான காரணிகளை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம். இறைவனின் சோதனை, தண்டனைகளை தாண்டி நாம் நமக்கே இழைத்துக்கொள்ளும் அநியாயம் என்றே இவற்றை நாம் அடையாளப்படுத்த வேண்டும்.
இறைவன் பௌதீக விதிகளுக்குள் உட்படுத்தித்தான் இந்த உலகை இயக்குகிறான். அதனை நாம் கவனத்தில் கொள்ளாமல் சூழலுக்கு செய்ய வேண்டிய அத்தனை அநியாயங்களையும் அட்டகாசங்களையும் செய்கிறோம். அப்படி அநியாயம் அட்டகாசங்களை செய்துவிட்டு சூழல் பாதிப்புக்குள்ளாகி ஏதும் அனர்த்தம் வந்ததும் நாம் விட்ட பாரிய தவறுகளை மறைத்து இறைவனின் விதி என்ற பெயரில் நம் தவறுகளை இறைவனின் மீது சுமத்த முயற்சிக்கிறோம்.
இறைவன் அழகையே விரும்புகிறான். இறைதூதர் கூட நேர்த்தியாக பணிகளை செய்வதனையே ஊக்குவித்திருக்கிறார்கள்.
சிறியதொரு செயலாக இருந்தாலும் சரி அல்லது பாரிய நகர கட்டமைப்புகளை அமைப்பதாக இருந்தாலும் சரி.
இஸ்லாம் கூறியவாறு எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல், தூரநோக்கமுமின்றி நினைத்த இடமெல்லாம் நாம் வீடுகளையும் கட்டிடங்களையும் அமைத்துவிட்டு அதன் விளைவாக ஏதும் அனர்த்தம் வந்ததும் நாம் அதன் பலியை சோதனை என்ற பெயரில் இறைவன் மீது சுமத்தக் கூடாது. உண்மையில் இது மிகத்தவறான மனநிலை.
முதலில் நாம் விட்ட தவறுகளை நாம் உணர வேண்டும். எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகளிருந்து நாம் தவிர்ந்துகொள்ள திட்டங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
உரிய தரப்பினர் இந்த விடயம் தொடர்பில் மக்களை அறிவுறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அவசியம் ஏற்படின் சூழல் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் மகிந்த அரசு கொழும்பு சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் விடயத்தில் மிகுந்த கரிசணை கொண்டிருந்தது. அதனை அமுல்படுத்த கொழும்பு சுற்றுப்புறப்பிரதேங்களில் கடுமையான சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்து அதனை கண்காணிக்க சூழல் பாதுகாப்புக்கு என்று தனியான படை நிறுவப்பட்டு கொழும்பின் சூழல் பாதூகாக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று கொழும்பு சூழல் மீண்டும் பழைய அசுத்தமான நிலைக்கே சென்றுள்ளது அல்லது சென்றுகொண்டிருக்கிறது என்றே சொல்ல முடியும்.
இறுதியாக
இறைவன் அருளாளன், அன்புமிக்கவன் அவன் ஒரு அணுவளவேனும் எவருக்கும் அநீதியிழைக்காதவன்.
இறைவன் புறத்திலிருந்து சிரியளவில் சோதனைகள் வந்த போதும் நாம் விட்டிருக்கும் பாரிய தவறுகள், நாம் சூழலுக்கு செய்து வைத்திருக்கும் பாரிய அழிவு வேலைகள் காரணமாக
அதன் விளைவுகள், பாதிப்புகள், நஷ்டங்கள் பாரியதாக உருவெடுக்கின்றன.
ஸெய்யித் குத்ப் அவர்கள் குறிப்பிட்ட இரு காரணிகளில் பௌதீக காரணியை பற்றி மாத்திரமே நாம் இங்கு குறிப்பிட்டு காட்டியிருக்கிறோம். நாம் மேலே ஆராய்ந்த இத்தவறுகளை உடன்டியாக திருத்திக்கொள்ளாமல்
அனர்த்தங்கள் வரும் போதெல்லாம் அதனை இறைவனின் செயல் என பலியை இறைவனின் மீது சுமத்திவிட்டு காலத்தை கடத்துவதால் மாற்றம் எதுவும் வந்துவிடப் போவதில்லை.
ARM INAS.
