உலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது.
ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோபேஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பெயர். யோஷினோரி ஓஷூமி ஜப்பான் நாட்டில் இருந்து நோபல் பரிசைப் பெறும் 23-வது நபர். ஜப்பான் நாட்டில் இருந்து, மருத்துவத்துறைக்காக பெறும் 6-வது நபர் ஆவார். பயோமெடிக்கல் துறையில் தீவிர ஆராய்ச்சியில் இருக்கும் பிரிவுகளில் ஒன்று, இந்த ஆட்டோபேஜி. அதில் மிக விரிவான ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார் ஓஷூமி.
ஓஷூமி 1945ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1974-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். டோக்கியோ தொழில்நுட்ப கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

(Vikatan)