இன்று சிலர் அப்பாவி
முஸ்லிம் மக்கள் மீது அரசியல் சவாரி செய்திகொண்டு, தாங்களே முஸ்லிம்களின் தலைவர் என்ற
ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் கிழக்கு தலைமை என்றும்,
விடுதலை, எழுச்சி என்றும், சத்தியம் என்றெல்லாம் அகராதியில் உள்ள அனைத்து தமிழ்
சொற் பிரயோகங்களும் பாவிக்கப்படுகின்றது.
ஆனால் முஸ்லிம்
மக்களுக்கென்று பிரச்சினைகள் வருகின்றபோது இவர்கள் எவரும் துணிந்து நின்று
களத்தில் போராட முன்வருவதில்லை. மாறாக போராட முன்வருகின்றவர்களை
மட்டம்தட்டுவதிலேயே இவர்களது கவனம் இருக்கின்றது.
அந்தவகையில் இறக்காமம்
மாணிக்கமடு பிரதேசத்தில் பலாத்காரமாக புத்தரின் சிலை வைக்கப்பட்டு ஒரு மாதம்
பூர்த்தியடயபோகின்றது. இதுவரையிலும் இது சம்பந்தமாக வாயே திறக்காத இந்த தலைமைகள்
இருந்து என்ன பயன்?
சர்ச்சைக்குரிய சிலைவைப்பு
சம்பவத்தினை அறிந்ததும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்
உடனடியாக ஸ்தலத்துக்கு விஜயம் செய்து நிலைமையினை பார்வையிட்டிருந்தார். குறித்த
பிரதேசத்தில் முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழர்களும் வாழ்வதனால், அமைச்சர் மனோ கணேசனை
அழைத்துக்கொண்டு பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து புத்தர் சிலை
அகற்றுவதற்கான கோரிக்கையை ரவுப் ஹக்கீம் முன்வைத்ததுடன் அமைச்சரவையிலும் இதனை
வலியுறுத்தியிருந்தார். ஒரு சமூகத்தின் பிரதிநிதி என்ற ரீதியிலும், ஒரு அரசியல்
கட்சியின் தலைவர் என்ற வகையிலும் அவர் தனது கடமையினை செய்தார்.
ஆனால் முஸ்லிம்கள்
மத்தியில் காளான் முளைப்பது போன்று காலத்துக்கு காலம் ஏராளமான அரசியல் கட்சிகள்
முளைத்திருக்கின்றது. அப்படியிருந்தும் இப்படியான சமூக பிரச்சினைகள் ஏற்படும்போது
அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவதற்கும் இந்த
கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் துணிச்சல் இல்லாமல் இருப்பது ஏன்?
மகிந்த ராஜபக்சவின்
ஆட்சிகாலத்தில் பொத்துவில் பிரதேசத்தில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு பெரும்
சர்ச்சை ஏற்பட்டது. அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும்
மேற்கொண்டிருந்தார்கள். அப்போது முஸ்லிம் காங்கிரஸ் உற்பட முஸ்லிம் கட்சிகள்
அனைத்தும் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தார்கள்.
அப்படியிருந்தும்
பொத்துவில் சிலைவைப்பையிட்டு அரசாங்கத்துக்கு
எதிராக துணிச்சலுடன் ரவுப் ஹக்கீம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஒரு
அமைச்சராக இருந்துகொண்டு கூட்டுப்பொறுப்பினையும் மீறி, தனது சமூகத்துக்காக
முடியுமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தும் அன்றைய அரசாங்கம் வசைந்து கொடுக்கவில்லை. அத்துடன் மகிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம்
காங்கிரசின் உறவு பெயரளவிலேயே இருந்தது.
ஆனால் அன்று மகிந்த
ராஜபக்சவுக்கு தம்பியாகவும், மகனாகவும் அதிகாரத்தின் உச்சியில் இருந்த முஸ்லிம்
அமைச்சர்கள் எவரும் இது சம்பந்தமாக வாயே திறக்கவில்லை. இந்த அமைச்சர்களின்
கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக பத்திரிகையாளர்கள் முயற்சித்தும் அது
முடியவில்லை.
மகிந்தவுடன் இருந்த
நெருக்கமான உறவினை பயன்படுத்தி இந்த முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது அரசியல்
காழ்ப்புணர்ச்சியினை களைந்துவிட்டு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன்
கைகோர்த்திருந்தால் பொத்துவிலில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையினை
அகற்றசெய்திருக்கலாம்.
அதுபோலவே இன்று மாணிக்கமடு
பிரதேசத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் பல முயற்சிகளை மேற்கொண்டபோதும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதனை
விடுத்து, தங்களது அடியாட்களைக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை விமர்சிப்பதிலேயே
சில முஸ்லிம் அரசியல் வாதிகள் கவனம் செலுத்துகின்றார்கள்.
இங்கே ஒரு விடயத்தினை
நாங்கள் கவனிக்க வேண்டும். அதாவது கடந்த பொதுத்தேர்தலில் கண்டி, அம்பாறை மாவட்டங்களில்
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சிங்கள மக்கள் வாக்களித்திருந்தார்கள். எனவே
தங்களுக்கு வாக்களித்த சிங்கள மக்களின் கடவுளை அகற்றும்படி கோரும்போது, அது
எதிர்காலங்களில் சிங்கள மக்கள் தங்களுக்கு அளிக்கும் வாக்குகளில் பாதிப்பினை
ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கில் ரவுப் ஹக்கீம் சிந்திக்கவில்லை.
அர்த்தமில்லாத
விடயங்களுக்கெல்லாம் பக்கம் பக்கமாக அறிக்கை விடுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள்,
இப்படியான சமூக விடயங்களுக்கு ஏன் வாய்பொத்தி மௌனியாக இருக்கின்றார்கள் என்றால், அது
சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தினர்களுடன் தங்களுக்கு உள்ள உறவிலும்,
வர்த்தகத்திலும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும்.
அதாவது சிங்கள மேட்டுக்குடி
நண்பர்களுக்கு ஒரு முகமும், தனது சமூகத்துக்கு இன்னொரு முகமும், தமிழர்களுக்கு
வேறு முகத்தை கட்டுகின்ற மூன்றுமுக அரசியல்வாதிகளால் எவ்வாறு தனது சமூகத்துக்காக
துணிச்சலுடன் பேச முடியும்?
சிங்கள
மேட்டுக்குடியினர்கள் தங்களை இனவாதிகள் என்று கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தின்
காரணமாக, தங்களது அரசியல் கட்சிக்கு முஸ்லிம் என்ற அடையாளத்தினையே வெளிப்படுத்த
தயங்குகின்ற இந்த அரசியல்வாதிகளால் எவ்வாறு அவர்களின் கடவுளான புத்தரின் சிலையினை
அகற்றுமாறு துணிச்சலுடன் கூறமுடியும்? அவ்வாறு எதிர்பார்ப்பது எங்களது
முட்டாள்தனமாகும்.
எனவே சிறுபான்மை மக்களின்
மாணிக்கமடு பிரதேசத்தில் பலாத்காரமாக சிலை வைக்கப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியடைய
இருக்கின்ற நிலையில் அது அகற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. முஸ்லிம்
அமைச்சர்கள் அதிகாரத்துடன் இருந்தும், இந்த விடயத்தில் ஒன்றுபட்டு செயற்பட
முடியாவிட்டால், எதிர்காலங்களில் சமூகம் சார்ந்த வேறு எந்த விடயங்களிலும் ஒன்றுபடமாட்டார்கள்.
இதனால் பாதிக்கப்படப்போவது எமது சமூகமே.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது