(சப்வான் பஷீா்) அது யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று மர்மமாக காணாமல் போயிருந்தது. அந்த நேரத்தில் வடக்கிற்கு பொருட்கள் கொண்டு செல்லும் சகல வீதிகளும் தடைப்பட்டிருந்தன.
அதனால் இராணுவத்துக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டிய கட்டாயம் விமானப்படைக்கு இருந்தது. அந்த நேரத்தில் ரத்மலானை விமானப்படைத்தளத்தில் விமானியாக கடமையாற்றிய ஒரு விமானிக்கு அழைப்புவிடுக்கப்படுகின்றது.
இன்னுமொரு விமானத்தையோ, விமானியையோ இழப்பது தமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் வடக்கிற்கு விமானப்படையின் ஒத்துழைப்பு அவசியமாய் இருந்தது.
அப்போது ஒரு விமானி "நான் MI 17 ஒன்றை எடுத்துச்செல்கிறேன்" என்று முன்னால் வருகிறார். அவருடைய பெயர் எலன் முஸ்தபா அஹ்மட் என்பதாகும். முஸ்தபாவுக்கு யுத்தமோ, யுத்தகளமோ ஒன்றும் புதிதல்ல.
அவருடைய தந்தை, சகோதரர்கள் அனைவருமே இராணுவத்திலும், பாதுகாப்புப் படையிலும் கடைமையாற்றியவர்களாகும். விமானி முஸ்தபா கொண்டு சென்ற MI 17 என்ற விமானம் 39 விமானப்படை வீரர்களுடன் காணமல் போனது.
1996 - 01 - 22 அன்று இலங்கை விமானப்படை வரலாற்றில் இந்த துக்கரமான சம்பவம் நிகழ்ந்தது. தனது கடைசி விமானப்பயணத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் முஸ்தபாவுக்கு தனது உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.
திருமணத்துக்கான சகல ஏற்பாடுகளும் நடந்தேறியிருந்தன. விவாகம், மனைவி, எதிர்காலம் என்று நம்மைப்போலவே அவரும் கலர் கலராய்
கனவுகள் கண்டு கொண்டு இருந்திருக்கலாம்.
இந்த முஸ்தபாக்களின்,முத்தாளிப்களின் வரலாறுகள் வெறும் கல்லறைகளில் செதுக்கப்படவேண்டியவையல்ல. இந்த நாட்டின் ஒவ்வொருவரினதும் உள்ளங்களில் செதுக்கப்பட வேண்டும்.
நாம் இந்த வரலாறுகளை மீண்டும் பேசுவதன் நோக்கம் முஸ்லிம்களும் இந்த நாட்டுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதல்ல, பங்களிப்புச் செய்ய வேண்டியவர்களாக நாம் மாறவேண்டும் என்பதற்காகும்.