உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை சீர்திருத்தத்தில் சிறுபான்மையின பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்-கிழக்கு மாகாண முதலமைச்சர் வலியுறுத்தல்.
நாட்டில் இனவாத செயற்பாடுகள் மூலம் சிறுபான்மையினர் ஏற்கனவே அச்சத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களின் அரசியல் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
தற்போது சில பிரதான கட்சிகள் தொகுதிவாரி தேர்தல் முறைமைக்கு ஆதரவாகவும் அதனையே செயற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையினாலேயே இந்த அச்சம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது தேர்தல் முறைமை மாற்றங்கள் குறித்து கருத்தாடல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிடடார்.
இதற்கு முன்னர் தொகுதிவாரி தேர்தல் முறையில் பெரும்பாலும் சிறுபான்மை அரசியல் பிரதிநிதிகள் பெரும்பான்மை கட்சிகளையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது .
இதன் மூலம் பெரும்பான்மையினக் கட்சிகளில் பெரும்பான்மையாக இருக்கும் பெரும்பான்மையினர் மத்தியில் பெரும்பான்மை கட்சிகளில் சிறுபான்மையாக இருக்கும் சிறுபான்மையினரால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் கொண்டு வரப்பட்ட போது அவை எடுபடாமல் போன சரித்திரங்களே அதிகம்,
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கக் கூடிய கட்சிகளையும் கணிசமான பிரதிநிதிகளையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பங்களை விகிதாசார பிரதிநித்துவ முறை மூலம் சிறுபான்மை மக்கள் பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்தது.
விகிதாசாரப் பிரதிநித்துவ முறைமையின் ஊடாக கணிசமான சிறுபான்மை பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான சந்தர்ப்பத்தை மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மூலமே பெற்றுக் கொள்ள முடிந்தது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புவதுடன் எமது மறைந்த தலைவர் பெற்றுத் தந்த உரிமையை இழப்பதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோது தயாராக இல்லையென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான நல்லாட்சி அரசாங்கம் உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமையில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்துக்கு எவ்வித குந்தகத்தையும் ஏற்படுத்தாது என நம்புகின்றோம்,
இன்று சிறுபான்மை கட்சிகள் பேரம் பேசும் சக்திகளாக பாராளுமன்றத்தில் உள்ளமையினாலேயே சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதாக உள்ளது என்பதுடன் நல்லாட்சி அரசு சிறுபான்மையினர் விடயத்தில் சாதகமாக செயற்பட்டு வருவதை நாம் அறிவோம்.
எனவே உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை சீர்திருத்திதில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிக்கக் கூடிய வகையிலான திருத்தங்களையும் கொண்டுவர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்