தந்தைகளது அலவிளா அன்பும் பரஸ்பரமும் அகத்தில் மட்டுமல்லாது செயற்பாடுகளிலும் நிறைந்திருப்பதை ஒருசில பிள்ளைகள் ஏற்காவிடினும் அதுவே உண்மை.
தந்தையிடம் ஆண் பிள்ளைகள் ஒட்டுறவாட தயங்குவதோடு தந்தை என்றால் பயம் என்ற சுபாவம் ஏற்படுத்தப்பட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மை,யதார்த்தத்தில் தந்தைகள் கொடூர அரக்க குணம் கொண்டவர்கள் அல்லர்,மனைவி,பிள்ளைகளுக்காக முழு மூச்சாக உழைத்து அவர்களுக்கு சந்தோஷமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க முனையும் ஒரு ஜீவன் எனில் அது தந்தையாகும்.
மனதளவில் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த முடியுமான வழிகளில் தந்தை முயற்சிப்பவர் என்றால் மிகையாது,பிள்ளைகள் தவறிழைக்கும் வேளையில் தந்தை கண்டிப்பதையிட்டு அவர் அன்பற்றவர் என்று ஒருபோதும் மதிப்பிடுவது உத்தமமற்றது;ஏனெனில் எந்நேரமும் தந்தை பிள்ளைகளுடன் சிரித்து மகிழ்ந்து அவர்கள் தவறிழைக்கும் பொழுது முறையாக கண்டிக்காது பொருட்படுத்தாது போனால் அப்பிள்ளைகள் அதே தவறுகளை சர்வசாதரணமாக செய்ய ஆரம்பித்துவிடுவர்,ஈற்றில் கைசேதப்படுவது பாசமழை பொழிந்த தந்தையாகத்தான் இருக்கும்.
பிள்ளைகளை கண்டிப்பதும் தந்தை அவர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடாகும் என்பதை பிள்ளைகளாகிய நாம் உணர்வதே சாலச்சிறந்ததாகும்.பிள்ளைகள் கேட்பவற்றை கஷ்டங்கள் பாராது கடன் பெற்றாவது வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்விக்கும் தந்தை உண்மையில் பாராட்டப்பட வேண்டடியவரே.அகத்தில் சொல்லமுடியாத பல இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு முகத்தில் சந்தோசத்தை வெளிக்காட்டி தமது கஷ்டங்கள் தம்மோடு போகட்டும் என்று பல வகையில் சிந்தித்து பிள்ளைகளது முன்னேற்றத்திற்கு அயராது உழைப்பவர் தந்தை எனில் மறுப்பதற்கில்லை.
தந்தை வீட்டில் இருப்பதில்லை என்று பிள்ளைகள் குறை கூறுவதும் உண்டு, இது ஒருவகையில் பிள்ளைகளது கண்ணோட்டத்தில் சரியாக இருப்பினும்,உண்மையில் தந்தை அநேக நேரங்களில் வீட்டில் இல்லாமலிருப்பதற்கான காரணம் அவர்கள் தொழில் நிமித்தம் வெளியில் அதிகம் செல்வதாகும்.சிறந்த தந்தை காரியாலய நேரங்களைத் தவிர்த்து வீடு வந்ததும் பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்கி அவர்களுடன் அன்பு பரிமாறுவதில் அதீத அக்கறை கொள்வதில் முனைப்போடு செயற்படுவார் என்பதே நிதர்சனம்.
தந்தையின் அருமை,பெருமை அனைத்தும் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆகி தந்தை என்ற அந்தஸ்தை அடையும் பொழுதே உணர்வர்,அதுவரை ஒருசில பிள்ளைகளுக்கு தந்தை எதிரி போன்றுதான் காட்சியளிப்பர்,சிலவேளைகளில் தந்தையை இழந்து தவிக்கும் பொழுதுதான் அவர்களது அருமை தெரியவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
தந்தைகளை மதித்து வாழும் பொழுதே அவர்களுக்கு உபகாரம் செய்து கண்குளிர்ச்சியளிக்கும் பிள்ளைகளாக வாழ முயல்வோம்.
ربنا رب ارحمهما كما ربياني صغيرا
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியாபுரம்-பாலாவி