(முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது) வில்பத்து சரணாலய
பிரதேசத்தை விரிவாக்கி வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி பிரசுரம் செய்யுமாறு
சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால
சிரிசேனா அவர்கள்.
முஸ்லிம்களுடன்
சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசம் என்று தெரிந்திருந்தும் சிங்கள இனவாதிகளை
திருப்தி படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வன்மையாக கண்டிக்கப்பட
வேண்டியது. அத்துடன் இதனை ஒரு சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ளவும் முடியாது.
மன்னார் மாவட்டத்தின்
முகவெத்திலையாக “முசலி பிதேசசபை” க்கு உட்பட்ட மரிசிக்கட்டி எனும் கிராமம்
காணப்படுகின்றது. இருபத்தெட்டு கிராமங்களை உள்ளடக்கிய முசலி பிரதேச சபையின் ஐந்து
கிராமங்களே வில்பத்து சரணாலயத்துடன் பிரச்சினைக்குட்பட்டதாகும். அதில்
முள்ளிக்குளம் கிறிஸ்தவர்களையும், ஏனைய மரிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி,
கொண்டச்சி எனும் நான்கு கிராமங்களும் முஸ்லிம் மக்களுக்குரிய கிராமங்களாகும்.
1990 ஆம் ஆண்டு இம்மக்கள் விரட்டப்பட்டதற்கு பின்பு அப்பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின்
கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. முஸ்லிம் மக்கள் வாழ்ந்த வீட்டு உபகரணங்கள்
சூறையாடப்பட்டதன் பின்பு, அப்பிரதேசத்தில் பெறுமதி மிக்க மரங்கள் விடுதலைப்
புலிகளினால் நடப்பட்டும், இயற்கையாகவும் முளைத்ததனால் அப்பிரதேசம் அடர்ந்த
காடுகளாக காட்சி தந்தது.
2009 இல் யுத்தம் முடிவடைந்தாலும் குறித்த இப்பிரதேசங்கள் 2008 ஆரம்பத்தேலேயே விடுதலை புலிகளிடம் இருந்து இராணுவத்தினரால்
விடுவிக்கப்பட்டிருந்தது. பின்பு இப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால்
நடப்பட்டிருந்த பெறுமதிமிக்க மரங்களெல்லாம் வன்னி மாவட்ட அரசியல் அதிகாரம்
உள்ளவர்களினால் வெட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது.
அரசியல் அதிகாரம்
உள்ளவர்களினால் சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுவதாகவும், காடுகள்
அழிக்கப்படுவதாகவும் கூறி, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முசலி பிரதேச சபைக்கு
உட்பட்டதும், வில்பத்து தேசிய சரனாலயத்துக்கு அண்மித்த பிரதேசங்களான மரிச்சிக்கட்டி,
பாலைக்குழி ஆகிய முஸ்லிம் கிராமங்களின் சில பிரதேசங்கள் வில்பத்து தேசிய
சரனாலயங்களுக்கு சொந்தமானது என்று 2012 இல் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இங்கே விடயம் என்னவென்றால்,
இந்த வர்த்தமானி பிரசுரம் வெளியிட்டபோது, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சுயமாக
முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அமைச்சராகவும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும்,
வடக்கின் வசந்தத்தின் செயற்பாட்டாளராகவும் அதி உச்ச அரசியல் அதிகாரத்தில் அமைச்சர்
ரிசாத் பதியுதீன் அவர்கள் காணப்பட்டார்.
குறிப்பிட்ட சில முஸ்லிம்
பிரதேசங்களை வில்பத்து தேசிய சரணாலயத்துடன் அன்று இணைக்கப்பட்டதாலேயே அது
வில்பத்து சரனாலயத்துக்குரிய பிரதேசம் என்று உரிமை கொண்டாடப்பட்டு இன்று
அப்பிரதேசம் விரிவாக்கம் செய்யப்படுகின்றது. 2௦12 இன் வர்த்தமானி பிரசுரத்தினை
தடுத்திருந்தால் இன்று முஸ்லிம் பிரதேசங்களை வில்பத்துக்குரிய பிரதேசமாக
ஜனாதிபதியினால் விரிவாக்கம் செய்யுமாறு கட்டளையிட முடியாதிருந்திருக்கும்.
இந்த வில்பத்து விவகாரம்
சம்பந்தமாக கடந்த ஆண்டுகளில் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்திருந்ததுடன்,
முழு நாட்டு மக்களின் கவனமும் இந்த விடயத்தில் ஈர்க்கப்பட்டிருந்தது.
சிங்கள இனவாதிகள் இந்த
விடயத்தில் தலையிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக கோசமிட்டதுடன், அமைச்சர் ரிசாத்
பதியுதீனுடன் நேரடி விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். அமைச்சரும் வில்பத்து
விடயத்தில் தனது உயிரை கொடுக்க தயாராக உள்ளதாக அன்று ஊடகங்களில் அறிக்கை
விட்டிருந்தார்.
ஆனால் இன்று நிலைமை இன்னும்
பெரிதாகி உள்ளது. அதாவது நாட்டின் தலைவரே சிங்கள இனவாதிகளுக்கு ஏற்றாற்போல் வில்பத்து
சரனாலயத்தினை விரிவாக்குமாறு கட்டளையிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஜனாதிபதியின்
அமைச்சரவையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் தொடர்ந்து பயனிப்பாரா?
இப்பிரச்சினைக்காக தனது உயிரை இழக்கவும், பதவியை தூக்கி எறியவும் தயார் என்று
கூறியதை அமைச்சர் மறந்தாலும், பத்திரிக்கை ஆதாரம் உள்ளது.
எனவே, அமைச்சர் தனது
பெறுமதியான உயிரை விடத்தேவையில்லை. குறித்த பிரச்சினைக்குரிய மாவட்டத்தின் ஒரே ஒரு
அமைச்சர் என்றவகையிலும், இந்த விடயத்தில் பரீட்சயமானவர் என்ற நிலையிலும், முஸ்லிம்களின்
தலைமைப் பொறுப்பை அடைய முயற்சிக்கின்றவர் என்ற ரீதியிலும் இந்த விடயத்தில் தனது
எதிர்ப்பினை அரசாங்கத்துக்கு காண்பிக்கும்பொருட்டு, தனது அமைச்சர் பதவியினை
இராஜினாமா செய்வாரா என்று பலரும் எதிர்பார்த்து காத்திருப்பதனை காணக்கூடியதாக
உள்ளது.
