ஏறாவூர் அல் முனீரா மகளிர் மகா வித்தியாலயத்தில் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட் அவர்களின் இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படும் ஆராதனை மண்டபத்துடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடத்துக்கு மர்ஹூம் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் (MARHOOM SHEIKHUL FALAH ABDULLA HASRATH BLOCK) அவர்களின் பெயரை சூட்டுமாறு முதலமைச்சர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து கிழக்கிலங்கையில் மாபெரும் மார்க்கப் பணிசெய்து சன்மார்க்க ரீதியிலான பல பெரிய பெரிய உலமாக்களை உருவாக்கித் தந்த பெருமைக்குரிய மனிதர்தான் இந்த ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள். மார்க்க விடயங்களில் மட்டுமல்லாது இனக்கலவரங்கள் மேலோங்கி மக்கள் அவதிப்பட்ட காலப்பகுதிகளில் சமாதான தூதுவராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் செயற்பட்டு பல பிரச்சனைகளை தீர்த்துவைத்தவர். அப்படிப்பட்ட ஒரு மார்க்கப் பெரியாரின் ஆசியினைப் பெற்ற ஏராளமானவர்கள் இலங்கையில் இருக்கின்றனர். எனவே அனைவரும் விரும்பும் ஒரு ஈமானியரான அவரது நாமத்தை பொறிப்பதில் சந்தோசம் கொள்வோம்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது நினைவுகளும் அன்னார் எமது சமூகத்துக்கு ஆற்றிய பணிகளும் நம்மை விட்டுப் போகாது. அவரின் நினைவாகத்தான் அன்னாரின் பெயரினை இந்தக் கட்டிடத்துக்கு சூட்டுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் பாடசாலைகள் மற்றும் கட்டிடங்களுக்கு அரசியல்வாதிகள் தங்களின் பெயர்களை வைப்பதை முற்றாக எதிர்த்து வரும் முதலமைச்சர் சமூகத்துக்கு தொண்டாற்றிவிட்டு மரணித்திருக் கும் பெரியவர்களின் நினைவாக பெயர்களைச் சூட்டுவது சிறப்பானது என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.