கடந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு எவ்வாறு பொதுபலசேனாவை பயன்படுத்தினார்களோ அதே போன்றே இந்த அரசாங்கமும் அவர்களை பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசாரதேர்ர் நீதிமன்ற உத்தரவையே பகிரங்கமாக கிழித்தெறிந்தும் இதுவரை கைது செய்யப்படாமலிருப்பது தொடர்பில் சிறுபான்மையினர் மத்தியில்மேலும் பல சந்தேகங்கள் தோன்றுவதற்கான சூழலை தோற்றுவித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி பொதுபலசேனா அமைப்பினர் தாக்குலொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டு வந்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்துள்ள நிலையில் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைப்பதற்கு இவர்கள் திட்டமிட்டுசெயற்படுகின்றார்கள் என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள்தேவையில்லை எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்
மீண்டும் அதிகரித்து வரும் பொதுபலசேனா அமைப்பின்செயற்பாடுகள் தொடர்பில் வினவப்பட்டபோதே முதலமைச்சர் இதனைக் கூறினார்
பொதுபல சேனா அமைப்பினர் வன்முறையை தூண்டும் நோக்கத்தில் தான் மட்டக்களப்புக்கு பயணித்தார்கள் என்பது பகிரங்கமான உண்மை என்ற போதும் பொதுபல சேனாவைத் தாக்குவதற்கு மட்டக்களப்பில் ஒரு குழு தயாராகியிருந்தமையினாலேயே அவர்களை தடுத்த்தாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாத ஒரு விடயம் எனவும் ஏன் இந்த அரசாங்கம் உண்மையை பகிரங்மாக கூற மறுக்கின்றது எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வியெழுப்பினார்.
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது எனவும் ஆகவே மத ஒருமைப்பாட்டையும் தேசிய ஒற்றுமையையும் சீர் குலைக்க முனைவோர் கைது செய்யப்பட்டு நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வழி வகைகள் செய்யப்படவேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்