இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 104 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தி உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதற்கான 48 மணி நேர கணிப்பீடு திங்கள்கிழமை காலை 9.28 மணிக்கு தொடங்கப்பட்டு இன்று (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 714 கிலோ எடை கொண்ட கார்ட்டோ சாட்-2 செயற்கைகோள் மற்றும் 664 கிலோ எடை கொண்ட 103 செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதன் மூலம், ரஷ்யாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செயற்கைக் கோள்கள் மற்றும் அவற்றை விண்ணில் செலுத்தப் பயன்படும் ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் வர்த்தக நோக்கில் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
கார்டோசாட்-2 செயற்கைக்கோளின் எடை 714 கிலோ ஆகும். ஒவ்வொரு நானோ செயற்கைக்கோளும் 5 முதல் 10 கிலோ வரை எடை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறன.
ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை ஆகும். இந்தியா தவிர அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 104 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம், ரஷ்யாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதோடு இது புதிய உலக சாதனையாக அமைந்துள்ளது.
