மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் அண்மித்த பகுதியிலுள்ள தனியார் குடியிருப்புக் காணிக்குள் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் புதை குழிக்குரிய அகழ்வுப் பணிகள் இன்று (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 02ம் திகதி வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உட்பட மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வி.சி.எஸ்.பெரேரா, சிரேஸ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மாத்தளை சட்ட வைத்திய நிபுணர் டி.ஐ. வைத்தியரெட்ண, புவி சரிதவியல் அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த, கண்டி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அசித்த கீர்த்தி குறித்த இடத்தை பார்வையிட்டனர்.
அகழ்வுக்குரிய திகதி 20 மற்றும் 21 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் கட்ட அகழ்வு பணிக்குரிய வேலைகள் நிறைவடைந்து அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016.10.30 ம் திகதி முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த வான்மதி உதயகுமார் என்பவரின் தனியார் காணிக்குள் மலசல கூடம் கட்டுவதற்குரிய குழி வெட்டும்போது ஒரு வித எழும்புத் துண்டங்கள் குழியில் இருந்து வெளிக்கிளம்பின.
இது தொடர்பாக ஏறாவூர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதும் நீதிவான் உட்பட சட்ட வைத்திய அதிகாரிகள் சகிதம் குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் ஒருசில எழும்புத் துண்டங்களை மேலதிக ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மூன்று மாதம் கடந்த நிலையில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றது.
கடந்த 2014 ம் ஆண்டில் முறக்கொட்டான்சேனை இராணுவத்தினரால் கையகப்படுத்தி இருந்த ஒரு பகுதி காணி உரிமையளர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் தற்பொழுது வரை சுமார் 45 குடும்பங்களின் தனியார் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
