Monday, August 7, 2017

அல்ஜசீரா தொலைக்காட்சியை தடை செய்ய இஸ்ரேல் திட்டம்

இஸ்ரேல் நாட்டிலுள்ள அல்ஜசீரா தொலைக்காட்சியின் அலுவலகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ அந்த அராபிய தொலைக்காட்சி மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டிவிடுவதாக கூறியிருந்தார். ஜெருசலேம் நகரில் சமீபத்தில் நேர்ந்த மோதல்களில் அத்தொலைக்காட்சியின் பங்கு இருந்ததாக பிரதமர் நேதான்யாஹூ ஜூலை 27 ஆம் தேதி கூறியதோடு அதை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார். 

இதனடையே பிரதமரின் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அல்ஜசீரா இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவற்றின் முக்கிய கருவியாக செயல்படுகிறது என்றார். இதன் காரணமாக இரண்டு காவலர்கள் இறந்து போனார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இஸ்ரேலின் அண்டை நாடுகளான சவூதி அரேபியா, எகிப்து போன்றவை அல்ஜசீராவை தடை செய்துள்ளன. மத தீவிரவாதத்தை அது தூண்டுகிறது எனும் பேரிலேயே அதன் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே தொடர்ந்து அத்தொலைக்காட்சியை இஸ்ரேலில் இயங்க விடுவது பொருத்தமில்லாதது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அத்தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்வதோடு கேபிள், சாட்டிலைட் தொடர்புகளையும் நீக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. நேதான்யாஹூவின் அரசு அல்ஜசீரா மட்டுமின்றி பல ஊடகங்களின் மீதும் தனது அரசை கவிழ்க்கும் நோக்கோடு செயல்படுவதாக கூறி வருகிறது. இதுவரை இருந்த இஸ்ரேலிய அரசுகளில் உச்சபட்சமான வலதுசாரி அரசாக நேதான்யாஹூவின் அரசு இருக்கிறது என்று பரவலாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் மக்கள்தொகையில் 17.5 சதவீதம் பேர் பாலஸ்தீன அராபிய இஸ்லாமியர்கள் ஆவர். இவர்கள் மத்தியில் மதவாத உணர்வுகளை அல் ஜசீரா தூண்டுவதாகவே இஸ்ரேலிய அரசு கருதுகிறது.
Disqus Comments