Sunday, November 23, 2014

வரலாறு காணாத தோல்வியடையப் போகிறார் MY3பால: அதாவுல்லா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வரலாறு காணாத தோல்வியடையப்போகிறார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆசியாவின் ஆச்சிரியம் மிக்க நாயகனாக திகழ்கின்றார். அவருடன் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அதிகூடிய வாக்குகளை பெற்று மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள்.

அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழ்க்கைத் தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.

கொடூர யுத்தத்தை ஒழித்தது மட்டுமல்லாமல் வருமானம் குறைந்த மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் பல அபிவிருத்தி திட்டங்களை ஏறற்படுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் வெளிநாட்டு சக்திகளும் கபட நாடகம் ஆடுகின்றன.

இதை ஒரு போதும் மக்கள் அங்கிகரிக்கமாட்டார்கள். இன்று மக்கள் எல்லோரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே உள்ளார்கள.; இதனை நாம் எல்லோரும் ஒற்றுமையாக  செயற்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்வரவேண்டும் என்றார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் சகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராசிக் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Disqus Comments