தைவான் நாட்டில் விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள ஷங்ஷான் விமான நிலையத்தில் இருந்து, கின்மென் தீவு நோக்கி நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10.53 மணிக்கு டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் ஒன்று (ஏடிஆர் 72 ரகம்) புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 58 பயணிகளும், சிப்பந்திகளும் பயணம் செய்தனர். அவர்களில் 31 பயணிகள் சீன நாட்டினர்; சுற்றுலாப்பயணிகள்.
விமானம் புறப்பட்டுச்சென்ற 3 நிமிடங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.
இந்த விமானம், தைவானின் தேசிய இலவச பாதை எண்.1–க்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, கீழே விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதி, பின்னர் பாலத்தில் மோதி, ‘கீலங்’ என்ற ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம், ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் கிடந்தது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் உடனடியாக அந்த ஆற்றுக்கு ரப்பர் படகுகளில் விரைந்தனர். ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் கிடந்த விமானத்தின் உடல் பகுதியை வெட்டி எடுத்து பயணிகளை மீட்டனர். சில பயணிகள் நீந்தி உயிர் தப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும் இந்த விபத்தில் 23 பயணிகள் உயிரிழந்தனர். 15 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 20 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சிலரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 12 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விட்டதாக உள்ளூர் ஊடகதகவல்கள் வெளியாகியது. தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
