Saturday, March 7, 2015

தென்னாபிரிக்காவுடனான போட்டியில் 29 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி


உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 29 ஒட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் நாணயசுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 222 ஓட்டங்களை எடுத்தது. 

மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென்னாபிரிக்கா அணிக்கு 47 ஓவர்களில் வெற்றி இலக்கு 232 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 

எளிதான இலக்குடன் களம் இறங்கிய தென்னாபிரிக்காவிற்கு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். தொடக்க வீரர் டி காக் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். 

2-து விக்கெட்டுக்கு அம்லாவுடன், டு பிளிஸ்சிஸ் ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடி நல்ல முறையில் ஆடியது. டு பிளிஸ்சிஸ் 27 ஓட்டங்களுடன் வௌியேற அடுத்த ஓவரிலேயே அம்லா 38 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். 

பின் தென்னாபிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ரசவ் (6), மில்லர் (0), டுமினி (12) என வரிசையாக வௌியேறினர். 

ஒருபுறம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி சிக்ஸர், பவுண்டரியாக விளாசினார். இதனால் அந்த அணி 200 ஓட்டங்களைக் கடந்தது. ஆனால், டி வில்லியர்ஸ் 77 ஓட்டங்களுடன் (58 பந்துகள் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) ஆட்டமிழந்தார். 

முடிவில் தென்னாபிரிக்கா 33.3 ஓவர்களிலேயே 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. 

இதனால் பாகிஸ்தான் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர் மொகமது இர்பான், ரகத் அலி, வாகப் ரியாஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 49 ரன்கள் எடுத்த சர்பிராஸ் அகமது ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். விக்கெட் கீப்பரான இவர் 6 கேட்ச் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
Disqus Comments