Saturday, March 7, 2015

பலாத்காரம் செய்தவனை சிறைக்குள் புகுந்து அடித்துக் கொன்ற மக்கள்


நாகலாந்து மாநிலத்தில் நாகா இன இளம் பெண் ஒருவரை காரில் கடத்தி 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த பரீத்கான் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்தனர். திமாப்பூரில் உள்ள மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். 

நேற்று முன்தினம் நாகா இனத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் திரண்டு குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திடீரென அவர்கள் திமாப்பூர் சிறையை உடைத்து உள்ளே புகுந்து பகீத்கானை வெளியில் இழத்து வந்து நிர்வாணமாக்கி, சித்ரவதை செய்து அடித்துக் கொன்றனர். 

மக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீமாப்பூர் மத்திய சிறைத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே அடித்து கொல்லப்பட்ட பரீத்கான் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் நேற்று அம்மாநிலத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அசாம் மாநில சிறுபான்மை மாணவர்கள் சங்கம் சார்பில், அம்மாநிலத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

இன்று 2–வது நாளாக அசாமின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து அசாம் மாநில அரசு நாகலாந்து மாநில அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது. கொல்லப்பட்ட பரீத்கான் குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் நஷ்டஈடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அசாமில் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாமில் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களில் கலவரம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உள்துறை உஷார்படுத்தியுள்ளது. 

இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments