பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹஸினா குண்டு தாக்குதல்களிலிருந்து மயிரிழையில் சனிக்கிழமை உயிர்தப்பியுள்ளார்.
தலைநகர் டாக்காவிலுள்ள கர்வன் பஸார் பிராந்தியத்தில் ஹஸினாவின் வாகன தொடரணிகள் கடந்து சென்றதற்கு 10 நிமிடங்களின் பின்னர் பல குண்டுகள் வெடித்துள்ளன.
தலைநகரில் சுஹ்ரவர்டி உடியன் பிராந்தியத்தில் அந்நாட்டின் தந்தையான ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் 1971 ஆம் ஆண்டு ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரையைக் குறிக்கும் வகையில் ஆளும் அவாமி லீக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஹஸினா சென்ற வேளையிலேயே இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
மேற்படி குண்டு வெடிப்புக்களில் சிக்கி ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 5 ஆம் திகதி பங்களாதேஷ் எதிர்க்கட்சியான பி.என்.பி. கட்சி தலைமையிலான 20 கட்சிகளின் கூட்டமைப்பால் வீதி மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற வன் முறைகளில் 100க்கும் அதிகமானோர் உயி ரிழந்துள்ளனர்.
