(Mohamed Muhsi) உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் தொடர்பில் தற்போது நிறைவு செய்து முடிக்கப்பட்டுள்ள இறுதி ஆவணத்தின் பிரகாரம் கற்பிட்டிப் பிரதேச சபைப் பிரிவில் உள்ள சனத்தொகை, வாக்காளர் தொகை, நிலம், இனப் பரம்பல்,வளங்கள் மற்றும் வருமானம் என்பவற்றைக் கருத்திற் கொள்ளும் போது பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிவில் சமூகத்தை முதலில் விழிப்பூட்டி தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நியாயம் பெற்றுக் கொள்ள செயற்படுவதன் அவசியத்தை உணர்த்த வேண்டியுள்ளது.
இதன் முதற் கட்டமாக கற்பிட்டி பெரிய பள்ளி வாசல் தலைவர் அல்ஹாஜ் சாஜஹான் தலைமையிலான உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலரை 11.04.2015 இரவு கற்பிட்டி பெரிய பள்ளியில் சந்தித்து விளக்கமளிக்கப்பட்டது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி, கனமூலை சிவில் சமூக அமைப்பின் சமூக ஆர்வலர்களான பஸ்லூர் ரஹ்மான், ரிஸ்வான் ஆகியோர் இது தொடர்பில் விளக்கங்களை அவர்களுக்கு வழங்கினர். மேலும் அடுத்த கட்டமாக சிவில் சமூகத்தின் பால் இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையப்பட்டுள்ள எல்லைகளின்(வட்டாரங்களின்) பிரகாரம் 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆனால் ஆகக் குறைந்தது 23 உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்பட தெளிவான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கற்பிட்டிப் பிரதேச சனத்தொகை,வாக்காளர் தொகை, நிலம் மற்றும் இனப் பரம்பல் என்பவற்றை திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்ற நியாயமான அச்சம் தோன்றியுள்ளது.
புத்தளத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாமை, கற்பிட்டிப் பிரதேசத்துக்கு முன்னைய ஆட்சியில் அமைப்பாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் செயற்பட்டமை, இந்த எல்லைகளை (வட்டாரங்களை) தயாரித்த அதிகாரிகள் குழுவின் பக்கச் சார்பான செயற்பாடு முதலானவை இந்த அச்சத்துக்கு காரணமாகும்.
கற்பிட்டி நகரில் உள்ள புதுக்குடியிருப்பு தனி வட்டாரமாக அமைய வேண்டும். அங்கு வாக்காளர்கள் மிக அதிகம். அது போல சின்னக் குடியிருப்பு , பெரியக் குடியிருப்பு என்பன கூட தனி வட்டாரங்களாக அமைய வேண்டும். ஆனால் புதுக் குடியிருப்பு, பெரியக் குடியிருப்பு,சின்னக் குடியிருப்பு ஆகிய மூன்று கிராம சேவகர்ப் பிரிவுகளும் ஒரு வட்டாரமாக ஆக்கப்பட்டுள்ளது. மண்டலக்குடாவுக்கு தனி வட்டாரம் தேவை.
அது போல பள்ளிவாசல் துறை,முசல்பிட்டி,முதலைப்பாளி என்பன ஒரு வட்டாரமாக ஆக்கப்பட்டுள்ளது. இங்கு முசல்பிட்டி,முதலைப்பாளி,கண்டக்குடா என்பனவே தனி வட்டாரமாக ஆக்கப்பட வேண்டும். பள்ளிவாசல் துறை,ரெட்பானா, அம்மாதோட்டம் முதலான பகுதிகளை உள்ளடக்கி ஒரு வட்டாரம் உருவாக்கப்பட வேண்டும்.
திகழி ,ஏத்தலை ஒரு வட்டாரமகவும், ஆலங்குடா,ஆண்டான்கேணி ஒரு வட்டாரமாகவும், நுரைச்சோலை, பூலாச் சேனை ஒரு வட்டாரமாகவும், உருவாக்கப்பட வேண்டும்.
புளுதிவயல், விருதோடை ஒரு வட்டாரமாகவும், கடையாமோட்டை, நல்லாந்தளுவ ஒரு வட்டாரமாகவும், கனமூலை தனி வட்டாரமாகவும், சமீரகம பெருக்குவட்டான், கொத்தாந்தீவு என்பன தனி வட்டாரமாகவும், கட்டைக்காடு,பூனைப்பிட்டி தனி வட்டாரமகவும் உருவாக்கப்பட வேண்டும்
ஆனால் இந்த யதார்த்தத்துக்குப் புறம்பாக இங்கு சித்து விளையாட்டு இடம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் சிறுபான்மை இன மக்கள் அதிகமாக இருக்கும் இப்பிரதேச சபையின் நீண்ட கால அதிகாரத்தை கைமாற்ற வேண்டும் என்ற நப்பாசையாகும்.
இவை பற்றி கற்பிட்டிப் பிரதேச சபைப் பிரிவில் உள்ள நியாயத்தை விரும்பும் சகலரும் தமது உடனடிக் கவனத்தை செலுத்தி நீதி, நியாயம் நிலை பெற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அதிலும் இம்மாதம் இறுதியில் இடம் பெறவுள்ள கற்பிட்டிப் பிரதேச சபை மாதாந்த அமர்வில் இது தொடர்பில் பிரேரணை கொண்டு வந்து, விவாதித்து நீதி நிலை நாட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.