காசு இல்லாத பசித்தவர்களுக்கு இலவசமாக உணவு தரும் கத்தார் வாழ் இந்தியர்...!
மாஷா அல்லாஹ்.......
உலகின் முதல் பணக்கார நாடாக திகழும் கத்தாரின் தலைநகரான தோஹாவில் ஓட்டல் நடத்திவரும் இந்தியரான ஷதாப் கான் என்பவர் பசியாய் இருந்து பணம் இல்லை என்றால் இங்கே இலவசமாக சாப்பிடலாம் என்ற விருந்தோம்பல் விளம்பரத்தை தனது கடையின் வாசலில் மாட்டி வைத்துள்ளார்.
தோஹாவின் மையப்பகுதியில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்தில் தொழிற்பேட்டைகள் நிறைந்த பகுதியில் டெல்லியை சேர்ந்த ஷதாப் கான் கடந்த 13 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்யும் நபர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான நேபாளிகள், இந்தியர்கள், வங்காளதேசத்தினர் சிறிய குடில் போன்ற கொட்டகைகளில் இங்கு வசித்து வருகின்றனர்.
இவர்களின் சராசரி மாத வருமானம் 800-1000 கத்தார் ரியால்களாக உள்ளது. (ஒரு ரியால் என்பது இலங்கை மதிப்புக்கு சுமார் 36 ரூபாய்க்கு சமம்). இவர்களில் பலருக்கு சரியான தேதியில் மாதச் சம்பளமும் கிடைப்பதில்லை. சம்பாதிக்கும் பணத்தில் குடும்பத்துக்கு பணம் அனுப்பி வைத்துவிட்டு பல தொழிலாளிகள் பசியோடு பட்டினியாக வேலை செய்வதை கண்டு மனம் வருந்திய ஷதாப் கான், ’நீங்கள் பசியாய் இருந்து பணம் இல்லை என்றால் இங்கே இலவசமாக சாப்பிடலாம்’ என்ற விருந்தோம்பல் விளம்பரத்தை தனது ஓட்டலின் வாசலில் மாட்டி வைத்துள்ளார்.
இத்தனைக்கும் ஷதாப் கான் ஒன்றும் பெரிய நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் அல்ல. இவரது ’ஸைக்கா’ ஓட்டலில் சுமார் 16 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட முடியும். 24 மணி நேரமும் திறந்திருக்கும் இவரது ஓட்டல் வாரத்தின் ஏழு நாட்களும் இயங்கி வருகின்றது. இந்த குறைந்த வருமானத்துடன் நிறைந்த மனதுக்கும் கருணை குணத்துக்கும் சொந்தக்காரரான இவர் தனது ஓட்டலின் வாசலில் இப்படி ஒரு விளம்பர பலகையை வைத்ததுடன் நின்று விடவில்லை.
பணம் இல்லாதவர்கள் கடையில் உள்ள யாரிடமும் யாசகமாய் கேட்டு சாப்பிட வேண்டியதில்லை. உதவி பெறுபவர்களின் தன்மானம் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில் கடையின் வாசலில் ஒரு ’ஃபிரிட்ஜ்’ வைக்கப்பட்டுள்ளது. அதனுள்ளே பல வகையான உணவு மற்றும் பேரீச்சம் பழங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கையில் பணமின்றி அவ்வழியாக பசியோடு போகும் கூலி தொழிலாளிகள் தங்களுக்கு தேவையானதை உரிமையோடு எடுத்து பசியாறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.