(நகூா் ரூமி - இந்தியா) அன்பு நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு வேண்டுகோள். டெக்னாலஜி வளர்ந்துகொண்டே இருக்கிறது. கூடவே மனிதநேயமும் குறைந்துகொண்டே வருகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அடிக்கடி எனக்கு – எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்தான் – வாட்ஸ்அப்பில் பல வீடியோக்கள் வருகின்றன. அவை பெரும்பாலும் வன்முறை, கொலை, மரணம் சம்பந்தப்பட்டதாகவே உள்ளன.
சமீபத்தில் லிஃப்டில் நசுங்கி இறந்த ஒரு குழந்தை பற்றிய வீடியோ வந்தது. அந்தத் தாயின் கதறலைக் கேட்டதுமே எனக்கு விளங்கிவிட்டது. உடனே அதை அழித்துவிட்டேன்,
அதையெல்லாம் பார்க்கும் மனோதைரியம் எனக்குக் கிடையாது. தண்ணீரில் சிலர் அடித்துச் செல்லப்படும் வீடியோ, ஒரு முஸ்லிம் பெண்ணை ஹிஜாபைக் கழற்றச் சொல்லி, அவர் முடியாதென்றதும் சுட்டுக் கொன்றது – இப்படி வந்துகொண்டே இருக்கின்றன.
என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்தக் குழந்தை இறப்பதை வீடியோ எடுக்கும் உறைந்துபோன மனநிலை உங்களுக்கு எப்படி வந்தது? டெக்னாலஜி மனிதத்தைத் தின்றுவிட்டதா? அந்த நேரத்தில் நீங்களும் சேர்ந்து அந்த லிஃப்ட்டை உடைக்க முயற்சி செய்திருந்தால் ஒருவேளை அந்தக் குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாம். முடியாதுபோயிருந்தாலும், உங்களால் முடிந்ததைச் செய்த திருப்தி உங்களுக்குக் கிடைத்திருக்கும், அந்த அறக்காரியத்துக்கான நற்கூலியை நீங்கள் நிச்சயம் பெற்றிருப்பீர்கள்.
மனிதர்களெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது அடிபட்டுக் கிடக்கும் ஒரு நாயை இன்னொரு நாய் இழுத்துக்கொண்டு போவதை ஒரு வீடியோ காட்டுகிறது. நாயைவிடக் கேவலமாக நாம் ஆகிவிட்டோம் என்பதை நாமே வீடியோ சான்றுகளுடன் நிரூபிக்கவேண்டுமா?
போதும் நிறுத்துங்கள், இந்த மாதிரியான வன்முறைகள், விபத்துகள், கொலைகள் பற்றியெல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்த பேசுங்கள், எழுதுங்கள். அந்த கொடூரங்கள் நடக்கும்போதே வீடியோ எடுத்து ரசிக்கும் மனநிலைக்குச் சென்றுவிடவேண்டாம்.
யோசியுங்கள்.
மிருகங்களிடம் உள்ள பாசமும் பொறுப்புணர்ச்சியும் மனிதர்களிடம் இல்லை என்பதை மனிதர்களே காணொளி வடிவில் வெட்கமில்லாமல் நிரூபித்துக்கொண்டிருக்கும் வேலையை நிறுத்துங்கள்.
சிந்தனையிலும் செயலிலும் மனிதர்களாக இருக்கவே நாம் முயலவேண்டும். அதற்குத் தடையாக டெக்னாலஜி இருக்குமானால் அதைத் தூக்கி எறியுங்கள். மனம் நிறைந்த வருத்தத்துடன் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.
