தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாவினால் உயர்த்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலத்தின் ஊடாக தனியார்துறையின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 10,000 ரூபாவாக
நிர்ணயிக்கப்படும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன குறிப்பிட்டார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னரே இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மாதாந்தம் 25 நாட்கள் சேவையாற்றும் ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அமைச்சர் டபிள்யூ.டி.ஜே, செனவிரட்ன கூறினார்.
மாதாந்தம் 40,000 ரூபாவை விடக் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கவுள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களாக ஊழியர்களின் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம் 2015 ஆம் ஆண்டின் மே மாதம் முதலாம் திகதி முதல் 1,500 ரூபாவும், 2016 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 1,000 ரூபாவும் என சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேறிய பின்னர் தனியார் துறையின் சகல ஊழியர்களுக்கும் மாதாந்த குறைந்தபட்ச சம்பளமாக 10,000 ரூபா கிடைக்கும் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
