20 ஓவர் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. குறிப்பாக இந்திய துடுப்பாட்டத்துக்கும் பாகிஸ்தானின் பந்து வீச்சும் இடையில் நடைபெறும் போராட்டமாக இப்போட்டி அமைய உள்ளது.
ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன.
தனது தொடக்க ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்ட இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினால் இறுதிசுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆடுகளத்தை பொறுத்தவரை ஓட்டம் குவிப்பது சுலபமான விடயமல்ல. எனவே இரு அணிகளுக்கும் இதுவவொரு சவாலான விடயமாகும்.
