Tuesday, May 17, 2016

புத்தளத்தில் தேசியக் கல்வியற் கல்லூரியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(TM - ரஸீன் ரஸ்மின்)  புத்தளம் மாவட்டத்தில் தேசியக் கல்வியற் கல்லூயொன்றை அமைப்பதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், இன்று செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தளம் மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.  இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சருக்கும் மத்திய அரசின் கல்வி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். அத்துடன், கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், தேசிய கல்வியற் கல்லூரி ஆணையாளர், பிரதி ஆணையாளர் மற்றும் திட்டப் பணிப்பாளர் ஆகியோரை அண்மையில் சந்தித்து புத்தளம் மாவட்டத்தில் தேசிய கல்வியற் கல்லூரியை அமைப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினேன். அவர்களும் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள். 

எனவே, புத்தளம் மாவட்டத்தில் தேசிய கல்வியற் கல்லூரியொன்றை அமைப்பதன் மூலம் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்கள் பற்றாக்குறைகளை மாத்தரமின்றி, சிங்கள மொழி மூலப்பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையையும்  நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம்.  

புத்தளம் மாவட்டத்தில் இரு மொழிப் பாடசாலைகளிலும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் காணப்படுவதால் இங்கு அமைக்க உத்தேசித்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் மூவின மாணவர்களும் கல்வியைத் தொடர்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளோம். சுமார் 500 மாணவர்கள் ஒரே நேரத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இந்தக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. 

குறித்த தேசிய கல்வியற் கல்லூரியை அமைப்பதற்கு சுமார் 25 ஏக்கர் காணி தேவைப்படுகிறது. இதற்குப் பொருத்தமான அரச காணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இதை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியுதவியை வழங்க அரபு நாடொன்று முன்வந்துள்ளது என்றார்.
Disqus Comments