Friday, October 7, 2016

கிழக்கின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினால் அனைத்துப் பிரச்சனைகளையும் சுமக்கவரும் -முதலமைச்சர் கண்டனம்

செய்தியாசிரியர்/செய்தி தயாரிப்பாளர்கள், கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்கு​ம் வகையில் சில திட்டங்கள் மத்திய கல்வியமைச்சினால்  திரைமறைவாக முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது

கிழக்கு மாகாணத்தில் 5021 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையிலும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு  கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சிக்கு கோரிக்கை விடுத்த ​ போதிலும் இது வரை அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

அத்துடன் தமது நியாயபூர்வமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி ,கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வௌிமாகணங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்  என்ற வகையில் நான் கண்டனம் தெரிவிக்கின்றேன்

இதேவேளை 13ஆவது திருத்தச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் பொறுப்பற்ற விதத்தில் கல்வியமைச்சின் செயலாளர் நடந்து கொள்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும் என்பதை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண பாடசாலைகள் குறித்த அதிகாரம் மாகாண அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்ட  போதிலும் தமது அதிகாரத்தின் கீழுள்ள பாடசாலைகளுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பில் மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சருடன் கலந்தாலோசிக்காமல் கல்வியமைச்சு நடந்து கொள்கின்றது

ஏனைய மாகணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணம்  தொடர்பில் கல்வியமைச்சு காட்டும் பாரபட்சம் கிழக்கு மாகாணத்துக்கு செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாகும் என நான் வருத்ததுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது

ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பல தரப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க முற்பட்ட போதும் நான் அளித்த வாக்குறுதியால் அமைதி காத்து வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

எனவே எமது கோரிக்கைகளை கல்வியமைச்சின் செயலாளர் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தினால் அதன் விளைவுகளை அவரும் கல்வியமைச்சுமே பொறுப்பேற்க வேண்டும் என்பதை இங்கு தௌிவாக கூறுகின்றேன்

 எவ்வாறாயினும் கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனம் தொடர்பில்  நிலையான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் என்ற வகையில் எனக்குள்ளது என்பதை நானறிவேன்

நன்றி
கிழக்கு மாகாண முதலமைச்சர்
கௌரவ.ஹாபிஸ் நசீர் அஹமட்.




Disqus Comments