Sunday, November 13, 2016

புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் தொலைநோக்குடன் சிந்திக்க வேண்டும்...

(Junaith M Haris)புத்தளம் கே.ஏ.பாயிஸின் வருகையால் புத்தளத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தெழுச்சி பெறப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. அதேபோல் மறுபுறத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் புத்தளம் மாவட்ட மக்களின் அபிலாஷைகள் நிறைவேறப் போகின்றது என்ற அடிப்படையிலும் பேசிக் கொள்கின்றார்கள். இது தவிர, புத்தளம் மாவட்டம் என்பது பன்மைத்துவ சூழலை கொண்டிருப்பதால் பெரும்பான்மை கட்சியுடன் சார்ந்து அரசியலில் ஈடுபடுவோரினால் மாத்திரமே மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என்பது மற்றுமொரு தரப்பின் வாதம். எல்லாவற்றுக்கும் மேலாக, புத்தளம் மாவட்ட முஸ்லிம்களுக்கென்று ஒரு தனித்துவம் பேணும் அரசியல் கலாசாரம் அவசியம் என்பது எனது அபிப்பிராயமாகும்.

இப்போதைக்கு எல்லோருமே கட்சியை வளர்ப்பதற்காக பாடுபடுகின்றார்களே ஒழிய, அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் வேறூன்றச் செய்வதற்காக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் விடயத்தில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. புத்தளம் மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்சியை பெரிதாக கவனிப்பதில்லை. சிறந்த அரசியல் ஆளுமை யாரிடத்தில் இருக்கிறதோ அவரையே மக்கள் விரும்புகின்றார்கள். எச்.எஸ் இஸ்மாயில் ஒரு சுயாதீனக் குழு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். நைனா மரிக்கார் ஐக்கிய தேசியக் கட்சிப் பின்புலத்தைக் கொண்டவர். அதன் பின்னர் கே.ஏ.பாயிஸ் முதலில் முஸ்லிம் காங்கிரஸ் பின்னணியையும், பின்னர் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சிப் பின்னணியையும் அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டார். அதேபோல் ஹாபி, நவவி, தாஹிர், நியாஸ், நஸ்மி இப்படி அனைவரையும் எடுத்துக் கொண்டால் மக்கள் எந்தக் கட்சி என்பதையும் விட நல்ல அரசியல் தலைமைகளையே எதிர்பார்க்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

அதனால், அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி, கட்சிகளாக இருந்தாலும் சரி தமது வளர்ச்சியை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் அரசியல் ரீதியில் அநாதைகளாக இருக்கும் புத்தளம் வாழ் மக்களை கௌரவமான ஒரு சமூகமாக தலை நிமிர்ந்து அவர்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.

குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸூம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் இந்த விடயத்தில் கவனமாக செயற்பட வேண்டும். மக்களின் வாக்குகள் பல கோணங்களில் பிரிந்து சென்றதால்தான் நாம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது பிரதிநிதித்துவத்தை இழந்தோம். இன்று தேசிய ரீதியில் எமக்காக குரல் கொடுக்கும் ஒரு தலைமைத்துவத்தை இழந்து நிற்கின்றோம்.

மக்களுக்காகத்தான் அரசியல் இருக்க வேண்டுமே ஒழிய, அரசியலுக்காக மக்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தக் கூடாது. உங்கள் அரசியல் கட்சிகள் மக்களின் அபிலாஷைகளில் கவனம் செலுத்துமாக இருந்தால், எங்களை ஒரு கௌரமான, பேரம் பேசும் சமூகமாக உங்களால் முன்னேற்ற முடியுமாக இருந்தால், கட்சியை வைத்து எனக்காக அன்றி எமக்கா ஏதாவது செய்வோம் என்று நீங்கள் முன்வருவீர்கள் என்றால் உங்களை அன்புக் கரம் கொண்டு வரவேற்க புத்தளம் மக்கள் தயார்.

குறிப்பாக, மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை உரசிப் பார்த்ததன் பின்னரே யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்ற முடிவுக்கு வர வேண்டும். வெறும் வாய்ப் பேச்சும், சாதிக்க முடியாத, பேரம் பேச முடியாத பிரதிநிதித்துவமும், பிரச்சினைகள் என்று வரும்போது நழுவல் போக்கை கடைபிடிக்கும் அரசியலும் எமக்கு தேவையில்லை.


நமக்கு புதிதாக அரசியல் பிரதிநிதித்துவம் தேவையில்லை. தேசிய அளவில் பேசப்பட்ட, சாதித்த, நைனா மரிக்கார், எஸ்.எச் இஸ்மாயில் போன்ற தலைமைகள் எம்மை விட்டு பிரிந்ததன் பின்னர், அந்த இடங்களை நிரப்ப ஏம் எம்மால் முடியாமல் போனது? இதற்கு பொது மக்கள் மாத்திரம்தான் காரணமா? அல்லது பிளவுபட்ட அரசியல் பின்னணியால் மக்களின் பிரதிநிதித்துவம் பறிபோனதா? அல்லது குறுக்கு வழி அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டதால், மக்களின் உண்மையான அரசியல் பலம் பிரதிபலிக்கவில்லையா? இந்த கேள்விகளுக்கு முதலலில் விடை காண வேண்டும். இதன் மூலமே எதிர்கால அரசியல் பிரதிநிதித்துவம் எப்படி அமைய வேண்டும்? எங்கிருந்து அதைத் தெரிவு செய்ய வேண்டும்? என்ற முடிவுக்கு வரலாம். குறிப்பாக, நாம் இழந்த சிறந்த அரசியல் ஆளுமைகளை ஈடு செய்யக்கூடியதாக எமது தெரிவு அமைந்திருக்க வேண்டும்.

அது யார் என்பதை மக்கள்தான் தெரிவு வேண்டும். மாறாக, நாம்தான் அரசியல்வாதிகள் என்று முன்வருபவர்களை நாம் ஏற்றுக்கொள்வதால் மாத்திரம் இந்த அபிலாஷை நிறைவேறி விடும் என்று நாம் சிந்தித்தால் எமது அரசியல் வங்குரோத்துநிலை தொடர்ந்தும் நீடிக்கும். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால், தொலைநோக்குடன் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கடப்பாடாகும்.
Disqus Comments