முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் எதிர்ப்பலைகளையே
வெளிப்படுத்துகிறார். பிரான்சில் அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு!
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில்
தமிழ்த் தலைவர்களான சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன்,
சத்தியலிங்கம் ஆகியோர் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ள போதும், வடக்கு முதலமைச்சர்
விக்னேஸ்வரன் எதிர்ப்பலைகளையே வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குக்
குறுக்காக, முஸ்லிம் சமூகம் ஒருபோதும் நிற்காதெனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் முடிவடைந்த நிலையில்,
சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் பிரான்சில் ஏற்பாடு செய்திருந்த “கறுப்பு
ஒக்டோபர்” நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன்,
மேலும் கூறியதாவது,
வடமாகாண சபை வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் எந்தவிதமான அக்கறையும்
காட்டுவதில்லை. மீள்குடியேற்ற விடயத்தில் அவர்கள் எந்தவிதமான சாதகமான
நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை. மீள்குடியேற்றத்துக்கு விக்னேஸ்வரன்
தடைபோடுகின்றார். அவர் சில சக்திகளின் கைப்பிள்ளையாக செயற்படுகின்றாரோ எனவும் சிந்திக்கத்
தோன்றுகின்றது.
வடமாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும், பயத்தினால்
வெளியேறிய சிங்கள மக்களையும் மீண்டும் அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமியில்
குடியேற்றும் நோக்கில் அமைக்கப்பட்ட விஷேட செயலணிக்கு, வடமாகாண சபை எதிர்ப்பு
வெளியிட்டுள்ளது.
இவ்வாறான சூழ்ச்சிகளைத் தகர்த்து, தடைகளை நீக்க வேண்டுமெனின் முஸ்லிம்களாகிய
நாம் ஒன்றுபட வேண்டும். இதன் மூலமே மீள்குடியேற்றத்தைச் சாத்தியமாக்க முடியும்.
வடக்கில் மீளக்குடியேறி இருக்கும் முஸ்லிம்கள், அடிப்படைத் தேவைகள்
நிறைவேற்றப்படாமல் வெகுவாக கஷ்டப்படுகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
அகதிகளான வடக்கு முஸ்லிம்களின் விவகாரத்தில் மாறிமாறி பதவிக்கு வந்த
அரசாங்கங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அசமந்தப்போக்குடனேயே செயற்பட்டன
என்பதை, நான் இங்கு வேதனையுடன் கூற விரும்புகின்றேன் என்றும் அமைச்சர்
குறிப்பிட்டார்.
ஊடகப்பிரிவு