(IBC TAMIL) வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை சர்வதேச சட்டத்திற்கு அமைய, இனச்சுத்திகரிப்பு என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த செயலை முஸ்லிம் மக்களிற்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூறுபவர்கள், தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று எந்தவொரு முஸ்லிம் தலைவராவது சொல்லுகிறார்களா? என்ற கேள்வியை தமிழ் மக்கள் தம்மிடம் கேட்கின்றபோது அதற்கு பதில் சொல்ல முடியாத நிலையில் தாம் உள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு முஸ்லீம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் விசேட கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பிலுள்ள ஹெக்டர் கொப்பேகடுவ ஞர்கார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற போதே, தமித்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையாக கிடைக்கும்வரை எந்தவாரு அரசாங்கத்துடன் இணைந்து எந்தவொரு அமைச்சுப்பொறுப்பையும் கையிலெடுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் சுமந்திரன் இந்த சநிதிப்பின் போது குறிப்பிட்டார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த சுமந்திரன், முஸ்லீம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை வேண்டும் என்றே அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
