(இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்போது இடம்பெறும் ஆர்பாட்டம் தொடர்பாக.)
உலக அளவில் இன்று இஸ்லாமிய வெறுப்பு அரசியல் வெகு வேகமாக கட்டமைக்கப்பட்டு வரும் சூழலில் இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல.
காலனித்துவ காலத்தை விடுத்து நோக்கும் போது, 2000 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் இலங்கையில் அரச மதமாக பௌத்த மதமே காணப்பட்டள்ளது என்ற விடயம் அன்று முதல் இன்று வரை இனவாதம் பேசும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் காணப்படும் பெருமிதமாகும்.
போர்த்துக்கேயர் காலத்தில் அடியோடு இல்லாதொழிக்கப்பட்ட பௌத்த மதமானது டச்சு காலத்தில் மீண்டும் தலை தூக்கியது. அன்றைய டச்சு கிழக்கிந்திய கம்பனி மியன்மாரில் இருந்து ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகளை கப்பல்களில் கொண்டு வந்தனர். இதனாலேயே இலங்கையில் பௌத்த மதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இன்று இலங்கையில் வாழும் பௌத்த மதகுருமார்களில் சிலர் மியன்மார் துறவிகளால் போதிக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களோ என்ற சந்தேகம் இன்றைய சில தேரர்களின் நடவடிக்கைகளுடாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தெற்காசியா முழுவதும் ஒரு காலத்தில் பௌத்த நாடுகளாகவே இருந்தன. எனினும் தற்காலத்தில் அங்கு பௌத்தம் இருந்ததற்கான ஒரு அடையாளம் கூட இல்லாது போயுள்ளன. அதே போன்றதொரு நிலைமையே தென்கிழக்காசிய சில நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக தேசப்பற்று, இனவாதம், அடிப்படைவாதம், தீவிரவாதம் என்ற பெயர்களில் தென்கிழக்கு ஆசியாவில் பர்மா(மியன்மார்), தாய்லாந்து, லாவோஸ், உள்ளிட்ட தேரவாதத்தினை கடைப்பிடிக்கின்ற நாடுகள் ஏற்கனவே பௌத்த முஸ்லிம் முரண்பாடுகளை நன்கு உருவாக்கியுள்ளன.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முஸ்லிம்கள் சமூக, பொருளாதார ரீதியாக சிறந்த ஒரு நிலையில் காணப்பட்டனர். இதில் ஏற்பட்ட பொறாமை காரணமாக அக்காலத்திலேயே சிங்கள பௌத்த இனவாதமானது முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருந்தது.
1915ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரம் முடிந்த பின் தர்மபால பின்வருமாறு குறிப்பிடுகிறார் “பிரித்தானியர்களுக்கு ஜெர்மனியர்கள் எவ்வாறோ சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் அவ்வாறே. சிங்களவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள் சமயத்தாலும், இனத்தாலும், மொழியாலும் அந்நியர்களே, பௌத்த சமயம் இல்லாவிடின் சிங்களவர்களுக்கு மரணமே மிச்சம். முழுத்தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதாரம், ஆண்மீகம் என்பனவே காரணமாகும்”. இது இவரால் முதலாம் உலகப் போர் காலத்தில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.
தர்மபாலாவின் சிங்கள் பௌத்த இனவாதம் எவ்வாறு இருந்தது எனில் அவர் முஸ்லிம் வியாபாரிகளை “தென்னிந்திய தெருப்பொறுக்கிகள்” என்றே அழைத்தார். கனேகம சரணங்கர தேரர் தர்மபால பற்றி எழுதிய நூலில் தர்மபாலாவின் செயல்களை வைத்து அவரை “மதவெறி பிடித்த பைத்தியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மனோ நிலைகள் காரணமாகவே தற்போது இனவாதிகள் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத்தலங்கள், கல்விநிலையங்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றை இலக்கு வைக்கின்றனர்.
இதனை சிங்கள் உரிமைகள் என்ற பின்னணியில் பாடலீ சம்பிக்க ரணவக்க தனது அல் கைதா அல் ஜிஹாத் என்ற நூலில் “தென்கிழக்கின் சுய இராச்சிய உருவாக்கத்துக்கு அதிகமான பங்களிப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் செய்யும் என்பதை 2013.01.09 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக பூமியில் ஒலுவில் பிரகடனம் வெளியிடப்பட்ட நாளில் பேச்சாளர்கள் தெரிவித்திருப்பதாக அறிய முடிகிறது. அந்தவகையில் அது இன்று முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டில் என்பது தெளிவாகிறது” மற்றும் பல்கலைக்கழகத்தின் துரித வளர்ச்சி மீதான பொறாமை. என விஷத்தை கக்குகிறார்.
அதே போல் மியன்மாரின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான 969 அமைப்புடனான கூட்டுச்சேர்க்கையாக, அமைந்த அசின் விராது தேரருக்கான இலங்கை அழைப்பு, சந்திப்பு, சொற்பொழிவு, ஒப்பந்தங்கள் என்பன தெற்காசியா, தென்கிழக்காசிய நாடுகளில் பௌத்த இனவாதத்தை விஸ்தீரனமாக்கும் செயல்களாகவே காணமுடிகின்றது.
அந்த வகையில் சம்பிகவின் விஷமக்கருத்தில் தொடங்கி இன்றுவரை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பில் பல இனவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டவண்ணமே உள்ளன.
அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக 16 நாட்களாய் இன்று (21.01.2016) வரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொடர்கின்ற மாணவர் போராட்டத்தில் ஒரு மாணவி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் செய்தியறிக்கையில் குறிப்பிட்ட விடயம் பல மட்டங்களில் பல விடயங்களை சிந்திக்க வைத்திருக்கின்றது. அதில் அம் மாணவி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போதான விசாரணைகள் அரேபிய சட்டத்தின் மூலமே இடம்பெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதிலிருந்து தெளிவாக விளங்குவது யாதெனில் சில தேரர்கள் தொடக்கம் தேர்வை எதிநோக்கியுள்ள மாணவர்கள் வரை அனைவர் மனங்களிலும் இன்று சிங்கள பௌத்த இனவாத, அடிப்படைவாத சிந்தனைகள் விதைக்கப்பட்டு துளிர்விட்டிருப்பதேயாகும்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை மறைந்த அமைச்சர் கலாநிதி அஷ்ரப் ஸ்தாபித்த காலம்முதலே கிழக்கின் மீதான இலங்கையில் தேரர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கின எனலாம். அன்று சோமதேரில் தொடங்கி தண்டுவே சோமாராம தேரர், ஞானசார தேரர், கொலன்னாவே சுமங்கல தேரர், ஆனந்த சாகர தேரர், பாஹியன்கம ஆனந்த தேரர் என பல தேரர்கள் இன்று முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தவண்ணமே உள்ளனர்.
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை 03.12.2016 அன்று மேற்கொண்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் வைத்து பொலிசாரால் தடுக்கப்பட்டனர் என BBC செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் மீண்டும் 21.12.2016 இல் நல்லாட்சியின் அனுசரணையுடன் இந் நாடகம் அரங்கேறியது. புத்தி ஜீவிகளை வியப்படையச் செய்யும் ஒன்றாகவே உள்ளது. அதாவது இலங்கை அரசின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷ உற்பட பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் சகிதம் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்தனர்.
அங்கு நீதியமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போது “இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும், மதங்களுக்கு இடையிலான அமைதியையும் உண்டு பண்ணுதல் தொடர்பாகவே ஞானசார குழுவினர் மட்டக்களப்புக்கு வந்து மதத்தலைவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்”(வீரகேசரி. 21.12.2016).
எது எப்படியாயினும் பொதுபலசேனா அமைப்பானது அஸ்கிரிய, மல்வத்தை உயர் பீடங்களை விட முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்றா ? என்ற சந்தேகம் புத்திஜீவிகள் முதல் சாதாரண குடிமக்கள் வரை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தற்போது கிழக்கு நோக்கி இனவாதிகளின் பார்வை திரும்ப காரணம் என்ன ? என்பது பற்றி நாம் சிந்தித்தே ஆகவேண்டும். சமூக, பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் இங்கு ஸ்தீர நிலை காணப்படுகின்றது. இதனை சிதைக்கவேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும்.
இதனாலேயே பொத்துவில் பிரதேசத்தில் முஹுதுமஹா விகாரையும், இறக்காமத்தில் புத்தர் சிலையும் வைக்கப்பட்டது. இதன்போது முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான அமைச்சர்களுக்கு குறைந்தபட்சம் மௌனமாகவேனும் இருந்திருக்கலாம். எனினும் அச் சந்தர்ப்பத்தில் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் இனவாதத்தை தூண்டுவதாய் அமைந்ததோடு புள்ளடியிட்ட முஸ்லிம்களை விரல்களை கடிக்கவும் வைத்தது எனலாம்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போதைக்கு சிங்கள பௌத்த இனவாதம் தனது காலடியை படிப்படியாக எடுத்துவைத்துள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் அடிக்கடி பொது பலசேன இயக்கத்தினர் உட்பட பல இனவாத சக்திகள் பல்கலைக்கழகத்தை சமூக வலைதளங்களில் போலிகளைக் கொண்டு சாடி வருகின்றனர்.
கடந்த அரசில் பேருவளை, அளுத்கமை கலவரங்களின் போது, அதன் குறைந்தபட்ச தாக்கத்தை பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைகளில் அவதானிக்க முடிந்தது. சிங்கள மாணவர்களது ஆதிக்கம் அப்போது சடுதியாக அதிகரித்துக் காணப்பட்டது. இங்கு தொலைக்காட்சிகளில் சிங்கள அலைவரிசைகளே அதிகம் இடம்பெற்றன. ஒருவருடைய உணவுக்கழிவுகளை இன்னொரு மாணவனைவைத்து குப்பைத்தொட்டியில் போடுமாறு வற்புறுத்தப்பட்டன. விடுதிப் பொறுப்பாளர்கள் மத்தியிலும் அச்ச நிலைமையே காணப்பட்டதனால் அன்று சில விட்டுக்கொடுப்புகள் இடம்பெற வேண்டியிருந்தன.
முன்னால் உபவேந்தர் மற்றும் முன்னால் அரசின் காலங்களில் மறைத்து வைத்திருந்த அக்கினிக்குஞ்சாகவே இங்கு பேரினவாத செயற்பாடுகள் காணப்பட்டன. அப்போது பல்கலைக்கழகத்தில் அமைதி, சமாதானம் என்பன ஏதோ ஒரு அடிப்படையில் காணப்பட்டது.
எனினும் இன்று மௌனம் கலைக்கப்பட்டு, பிச்சைக்காரன் கால் புண் போன்ற ஒன்றாக இந்நிலைமை மாறியுள்ளது. திடீரென மாணவர் புரட்சிப் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன, இன்றும் இடம்பெறுகின்றன.
பொதுவாக எமது தாய் நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பது யாவரும் அறிந்ததே, எனினும் சில சந்தர்ப்பங்களில் அதுவே இனவாதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுபோன்ற ஒன்றாக இன்றைய பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு மாணவர்களது ஒழுக்காற்று நடவடிக்கைகளில் கூட நல்லிணக்கம் பேணவேண்டிய மற்றும் இனவாத கருத்துக்களுக்கு இடம்தராத விதத்தில் செயற்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இன்று எமது பல்கலைக்கழக மாணவர்களால் பின்வரும் கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
1. தீராத சிற்றுண்டிச்சாலைகளின் பிரச்சினை
2. விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடுகள்.
3. மாணவர் சுதந்திரத்தைக் இல்லது செய்யும் CCTV
4. கூட்டம் கூடுவதற்கான உரிமை
5. விரிவுரையாளர் பற்றாக்குறை
6. மாணவர் அடக்குமுறை
7. கல்வி நலன்புரி பிரச்சினைகளுகான தீர்வு.
8. மாணவ ஒழுக்காற்று ஆலோசகரின் அதிகாரம்.
9. தனிப்பட பழிவாங்கல்.
10. மாணவர் இடைநிறுத்தம்.
11. மாணவர் கோரிக்கைகளின் உடனடி நிறைவேற்றுகை.
12. மாணவர் கருத்துச் சுதந்திரம்.
என பல்வேறான கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.
இதில் இங்கு புதிதாய் ஏற்பட்ட பிரச்சினைகளாக ஓரிரண்டு காணப்பட்டாலும், ஏனையவை பிச்சைக்காரன் கால் புண்களே ஆகும். பல்கலைக்கழக நிர்வாகமும் இப் பிரச்சினைகளுக்கு பலதடவைகள் தீர்வுகளை முன்னெடுத்தாலும் அவற்றின் ஆரோக்கியம் இப்போதைக்கு போதுமான நிலையில் இல்லை என்பதே பல மாணவர் பேரவை உறுப்பினர்களின் நிலைப்பாடாகும்.
இனவாதமற்ற போராட்டம் என, குறிப்பிட்ட மாணவர் பேரவை அறிக்கை விடுத்திருந்தாலும் இதில் முக்கியமாக சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயம் யாதெனில் பல்கலைக்கழகத்துக்கு வெளியே மேற்கொள்ளப்படும் ஆர்பாட்டங்கள் பல்கலைக்கழகத்தை அண்மிய நகரங்களாக கல்முனை, அக்கரைப்பற்று காணப்பட்ட போதிலும் ஏன், சிங்கள் பௌத்த மக்கள் அதிகம் வாழும் அம்பாறை, மொனறாகலை நகர்களில் இடம்பெறுகின்றன என்பதாகும்.
திடீரென மாணவர் போராட்டங்கள் ஏற்பட காரணம் என்ன? இதன் பின் புலம் என்ன? இவர்களது நோக்கம் என்ன என்பது பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.
ஏனெனில் சிந்திப்பதானது; ஒரு வேலை இனவாத சக்திகளின் பட்டியலில் அடுத்த இலக்காக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் காணப்பட்டால் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வாய்ப்பாகலாம்.
பல்கலைக்கழகத்துக்கு பின்புறம் காணப்படும் கடற்கரை எவ்வாறு வேகமாக அரிக்கப்பட்டு அழிவுற்று வருகின்றதோ, அதைவிட மிக வேகமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள பௌத்த இனவாத, அடிப்படை வாத செயற்பாடுகள் விதைக்கப்பட்டு, விருட்சமாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு உதாரணமாக பல்கலைக்கழக சமய அனுஷ்டான அறைகள், சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் மற்றும் கிறுக்கப்பட்டிருக்கும் சிங்கள பௌத்த இனவாத குழுக்களின் பெயர்களின் வாசகங்களை குறிப்பிடலாம்.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கம், அதில் அங்கம் வகிக்கும் துறை சார்ந்த அமைச்சர்கள், பல்கலைக்கழக நிருவாகிகள், மாணவர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் கரிசனை காட்டுவதானது; அரசியல் மற்றும் வரலாற்று, பிழைகளால் மூன்று தசாப்தம் இடம்பெற்றது போன்ற இன்னுமொரு கசப்பான அனுபவத்தை மற்றும் சிறுபான்மையினர் மீதான முறையற்ற அத்துமீறல் இன அழிப்பை தவிக்கக்கூடியதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
A.H.M RILWAN.
BACHELOR OF ARTS,
SPECIALIZATION IN SOCIOLOGY,
SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA.
