உலகின் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளில் ஒன்றான “மைக்ரோசொப்ட் ஒஃபிஸ்“ இற்கான புதிய பதிப்பின் பிறீவியூ பதிப்பு என அழைக்கப்படும் முன்தோற்றப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் இறுதிநிலைப் பதிப்பு அடுத்தாண்டே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய பதிப்பு மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் 2013 என அழைக்கப்படவுள்ளது. இதன் வெளியீட்டின் போது கருத்துத் தெரிவித்த மைக்ரோசொப்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் போல்மர், இந்தப் புதிய பதிப்பு மைக்ரோசொப்டின் அதிக எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வெளியீடு எனத் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் வின்டோஸ் 7, வின்டோஸ் 8 இல் இயங்கும் கணினிகளிலும், டப்லட்களுக்காகவும் வெளியிடப்பட்டுள்ள இதன் பதிப்பு, அடுத்தாண்டு இறுதிநிலைப் பதிப்பாக வெளியாகும் போது அப்பிள் கணினிகளுக்காகவும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள புதிய பதிப்பில் பல புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கிய வசதியாக பிடிஎப் கோப்புக்களை நேரடியாக மைக்ரோசொப்ட் வேர்ட்டில் திறந்து அவற்றை எடிட் செய்யக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இதற்கு முன்னர் இருந்தது போன்று பிடிஎப் கோப்புக்களை முதலில் வேர்ட் கோப்பாக மாற்றி, அதன் பின்னர் அவற்றை எடிட் செய்து, பின்னர் திரும்பவும் பிடிஎப் கோப்பாக மாற்றிப் பயன்படுத்த வேண்டிய தேவை தற்போது இல்லாமற் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு பிடிஎப் கோப்புக்களை மைக்ரோசொப்ட் வேர்ட்டில் எடிட் செய்யும் போது அந்தக் கோப்பின் வடிவங்களில் எந்தவித மாற்றங்களையும் வேர்ட் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, மைக்ரோசொப்ட் வேர்ட்டைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே இணையத்தைப் பயன்படுத்தித் தேவையான விடயங்களைப் பார்த்த பின் அவ்விடயங்களை வேர்ட் இல் இணைப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக வேர்ட் கோப்பு ஒன்றில் வீடியோ ஒன்றை இணைக்க விரும்பினால் இணைய மேய்வானுக்குச் செல்லாமல் வேர்ட்டில் இருந்தே "பிங்" தேடுதற் பொறி ஊடாகத் தேடி அந்த வீடியோக் கோப்பினை இணைக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு புதிய மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் பதிப்பு இணையத்தோடு அதிகமாகச் சேர்ந்தியங்குவதற்குரிய வசதிகளைக் கொண்டுள்ளது.
ஸ்கை ட்ரைவ், ஃபிளிக்கர் போன்ற கணக்குளை உங்கள் மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் பதிப்போடு இலகுவாக இணைத்துப் பயன்படுத்தக்கூடியவாறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மைக்ரோசொப்ட் வேர்ட் தவிர, எக்சல், வன் நோட், பப்ளிஷர் உட்பட அனைத்து ஒஃபிஸ் உள்ளடக்கங்களும் புதுமைப்படுத்தப்பட்டு புதிய வடிவில் காணப்படுவதோடு பயன்படுத்துவதற்கு இலகுவான வழியில் காணப்படுகின்றன.
இந்தப் புதிய பதிப்பு தற்போது முன்தோற்ற அமைப்பில் கிடைப்பதால் இலகுவாகத் தரவிறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இறுதிப்பதிப்பு வெளியாகும் வரை இதை இலகுவாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய பதிப்பை இலவசமாகத் தரவிறக்க http://www.microsoft.com/office/preview/en என்ற முகவரிக்குச் செல்லலாம்.
இதனை தரவிறக்கம் செய்ய Live Mail அல்லது Hot Mail அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.